பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2015

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடு மற்றும் அலுவலங்கள் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை


சென்னையில் நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலரது வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடைபெற்றது. காலை 7 மணி முதல் விஜய்க்கு சொந்தமான நீலாங்கரை வீடு மற்றும் அவரது ரசிகர் மன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இயக்குநர் சிம்புதேவன் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த புலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை கீழத்துரையில் உள்ள வீடு மற்றும் தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. 


நடிகை சமந்தாவின் சென்னை மற்றும் ஐதராபாத் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. நயன்தாராவின் சென்னை மற்றும் கொச்சி வீடுகள் மற்றும் அலுவலங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதுதவிர திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவுக்கு சொந்தமான ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில்  உள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, கொச்சி, திருவனந்தபுரம், ஐதராபாத் ஆகிய நகரங்களில் மொத்தம் 35 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.