பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2015

ஐ.நா அறிக்கை மீதான தீர்மானம் இம்மாத இறுதிக்குள் நிறைவேறலாம்

இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை மீதான தீர்மானமானது, இம்மாத இறுதிக்குள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக
பேரவையின் பேச்சாளர் ரூபார்ட் கோல்விலி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

‘கடந்த 9 ஆண்டு காலகட்டத்தில் நடந்த விடயங்களை ஐ.நா விரிவாக பரிசீலிக்கின்றது. அது எப்படி இலங்கைக்குள்ளும் வெளிநாடுகளிலும் பார்க்கப்படுகிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். பின்னர், ஐநா பேரவையில் ஒரு தீர்மான வரைவு முன்வைக்கப்படும். அதையொட்டி ஒரு தீர்மானத்தை அவர்கள் கொண்டுவர விரும்பினால் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி, அதை அடுத்த சில நாட்களில் கொண்டு வருவார்கள். பேரவையின் இறுதி நாட்களிலேயே இது குறித்து விவாதிக்கப்படும்.

மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் நாடுகளைக் கட்டுப்படுத்துபவையோ சட்டமோ அல்ல. ஆனால் அவை, உலகின் மிக உயர்ந்த மனித உரிமை அமைப்பின் கருத்து. எனவே இந்த அமைப்பில் உள்ள இலங்கையின் சக நாடுகள், அடுத்து என்ன நடக்கும் என்பதை முடிவு செய்வார்கள்.

மனித உரிமைப் பேரவையில் இயற்றப்படும் தீர்மானங்கள் எல்லாம் ஐ.நா மன்ற பொதுச் சபைக்கும் கொண்டு செல்லப்படும். எனவே இது சர்வதேச நாடுகளின் கவனத்தில் இருக்கும்.

இலங்கை விடயத்தில் சர்வதேச ஊடகங்கள், தன்னார்வ நிறுவனங்களும் தலையிடுவார்கள். காரணம், இவ்விடயம் இந்தளவு தூரம் வந்தமைக்கு காரணமே தன்னார்வக் குழுக்கள் தான். ஆகவே இது ஒரு ஆரம்பமாகத் தான் இருக்கும்.

ஆகவே, இலங்கையில் கடந்த காலத்தில் நடந்ததைக் கணக்கிலெடுத்துக் கொண்டு, அது குறித்து அனைத்து சமுதாயங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து, முன்னோக்கிச் செல்ல இது ஒரு உண்மையான சந்தர்ப்பத்தை தருகிறது. அந்தப் பாதையை இலங்கை தேர்ந்தெடுத்தால் அதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய நல்லெண்ணம் கிடைக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.