பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2015

ஈழத்தமிழ் இளைஞர் சாவுக்குக் காரணமான காவல்துறை ஆய்வாளரை பணி நீக்கம் செய்க! வைகோ


இலங்கைத் தீவின் தமிழ் ஈழப் பகுதியான மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்ற இளைஞர் சில ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார்.
கடவுச் சீட்டு குற்றச்சாட்டுக்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறை ஆய்வாளர், மோகனை கொடூரமாக அடித்து சித்தரவதை செய்து துன்புறுத்தியதில், மோகன் உயிர் நீத்தார் என்று தெரிகிறது.
ஆனால் அவர் இருதய நோயில் இறந்தார் என்று காவல்துறையினர் கூறிய நிலையில், ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் மோகனின் சடலம் வைக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்டு இயக்குநர் கௌதமனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு அவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், அம்பிகாபதி, தேர்தல் பணிச் செயலாளர் கழக குமார் ஆகியோர் சென்று நியாயம் கேட்டபோது, இன்று செப்டம்பர் 5 ஆம் தேதி காலையில் மேஜிஸ்டிரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடக்கும் என்று கூறினர்.
காவல் நிலையத்தில் மோகன் சாவுக்குக் காரணமான காவல்துறை ஆய்வாளரை தமிழக அரசு உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
காவல் நிலைய விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டோரை காவல்துறையினர் துன்புறுத்துவதையும், சில நேரங்களில் லாக்கப் மரணங்கள் நடைபெறுவதையும் உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருப்பதோடு,
எவ்விதத்தில் காவல்நிலைய விசாரணை நடைபெற வேண்டும் என்பதையும் நெறிப்படுத்தி உள்ளது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
காவல் நிலையத்தில் மோகனை சித்ரவதை செய்த அராஜக செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது