பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2015

எமது பிள்ளைகள் அனைவரையும் பொதுமன்னிப்பு அடிப்படையில் உடன் விடுதலை செய்யுங்கள்! நீதியமைச்சருக்கு கடிதம்

அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து உடனடியாக
விடுதலை செய்து தங்களின் உண்மையான நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.இவ்வாறு நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அரசியல் கைதிகளின் உறவினர்களான பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளைகளாகிய தாம் கடந்த 20 ஆம் திகதி அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை வேண்டி ஜனாதிபதிக்கும் அதன் பிரதிகள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு பகிரங்க மடலாக அனுப்பி இருந்தோம்.
அதன்பின் கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் தாங்கள் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக மேற்கொண்ட ஏற்பாடுகள் தொடர்பாக வெளியிட்ட சில கருத்துக்களையும் ஊடகங்கள் ஊடாக அறிந்துகொண்டோம்.
தங்கள் ஊடக அறிக்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக 2012ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த விசேட நீதிமன்றத்தில் 482 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் வழக்குகள் உட்பட பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 346 வழக்கு விசாரணைகள் 28 மாதங்களில் நிறைவு செய்யப்பட்டு விட்டதாக கூறியிருந்தீர்கள்.
ஆனால், விசேடநீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் முடிவடைந்ததாக கூறிய 346 வழக்குகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் வெறும் 4 வழக்குகள் மட்டுமே முடிவடைந்திருகின்றது.
ஏனைய 342 வழக்குகளும் பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பானவை என்பதையும் கூற மறந்து விட்டீர்கள்.
எனவே, இந்த விசேட நீதிமன்றமானது பாலியல் மற்றும் சிறுவர்துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்டதென்பதே உண்மையாகும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நீதிமன்றம் 2013 ஓகஸ்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை தாங்கள் கூறியது போன்று 28 மாதங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் 15 வழக்குகளே அனுராதபுர விசேட நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதில் 3 வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 3 அரசியல் கைதிகள் தம்மீதான குற்றச் சாட்டுகளுக்கான வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளக்கூடிய பொருளாதார பின்னணி இல்லாத காரணத்தினால் தம் மீதான குற்றச்சாட்டுகளைப் பொறுப்பேற்று தண்டனை பெற்றுள்ளனர்.
கடந்த 25 மாதங்களில் விசேட நீதிமன்றங்களால் நிறைவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட 346 வழக்குகளில் பயங்கரவாத தடைச் சட்டத்திகீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படாது முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 4 வழக்குகள் தவிர்ந்த ஏனைய 342 வழக்குகளும் பாலியல் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பானவை என்பதே உண்மையாகும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனுராதபுரம் விசேட நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் இவ்வாறு இருக்கும் போது ஏனைய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பாக நாம் தங்களுக்கு விளக்க வேண்டிய தேவை இல்லையென நம்புகின்றோம்.
நாங்கள் வெளியிட்ட தகவல்கள் தங்களின் கீழ் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு வழங்கிய பொய்யான தகவல்களாகும். அல்லது தற்போதைய சூழலில் தாங்கள் சர்வதேசத்தையும் எம்மையும் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் வெளியிட்ட ஓர் அறிக்கையாகும்.
எமது கடிதங்கள் மூலம் எமது பிள்ளைகளின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறோ அல்லது விசேட நீதிமன்றங்கள் விசேட குழுக்கள் மற்றும் பிரதிநிதிகளை நியமிப்பது போன்ற கருத்துக்களின் ஊடாக தொடர்ந்தும் எமது பிள்ளைகளின் விடுதலைக்கான காலங்களை இழுத்தடிப்பதற்கான கருத்துக்களையும் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை.
சிறைகளில் இருக்கும் எமது பிள்ளைகள் அனைவரும் விசாரணை என்கின்ற பேரில் நீதிக்குப் புறம்பான முறையில் 8 தொடக்கம் 15, 20 வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டார்கள்.
எனவே, எமது பிள்ளைகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து உடனடியாக விடுதலை செய்து தங்களின் உண்மையான நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துமாறு வேண்டுகின்றோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.