பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2015

இன்னும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை : திருமாவளவன்



 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சேலத்தில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.   அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,    ‘’தமிழகத்தில் மதுகடைகளை மூட வேண்டும். மத்திய அரசு மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 31–ந்தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. மேலும், அதே நாளில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவணப் பதிவுப்படி கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 72 தலித்துகள் கொல்லப்பட்டுள்ளது தெளிவாகிறது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு, இலங்கை அரசு மற்றும் மீனவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றினால் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்.

மக்கள் நல கூட்டு இயக்கம் கூட்டணியாக உருவானால், அதன் கொள்கைகளில் உடன்பாடு உள்ளவர்களை ஏற்றுக் கொள்வோம். ஆனால் இன்னும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை.   மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் தலைவர்களை கலந்து ஆலோசிதித்து முடிவு எடுக்கப்படும்’’என்று தெரிவித்தார்.