பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2015

கீழே வீழ்ந்த பின்னரும் பொலிஸார் தாக்கினர்: பல்கலைக்கழக மாணவி அதிர்ச்சி தகவல்


கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது பொலிஸார் தமக்கு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடாத்தியதாக, ஊடகங்களில் வெளியான புகைப்படங்களிலுள்ள பல்கலைக்கழக மாணவியான சசினி சந்திபனி தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தாக்குதல்கள் எதுவும் நடாத்தப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க சிரிவர்தன போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் தேசிய கணக்காய்வு டிப்ளோமா பாடநெறியின் முதலாவது ஆண்டு மாணவியே சசினி சந்திபனி... 
“எனது முதுகு பகுதிக்கு பல தடவைகள் தாக்குதல் நடாத்தப்பட்டது. நான் கீழே வீழ்ந்து விட்டேன். எனினும், அவர்கள் தொடர்ச்சியாக என்னை தாக்கினார்கள்” என அவர் கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் தாக்குதல்களை நடாத்தும் புகைப்படங்கள் சில ஊடகங்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாம் அவர் மீது தாக்குதல் நடாத்தவில்லை எனவும், மாறாக அவரை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க சிரிவர்தன ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தன்னை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும், தனது தலைப் பகுதிக்கு தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் சசினி சந்திபனி கூறியுள்ளார்.
தாங்கள் எவ்வித தவறுகளையும் இழைக்கவில்லை என கூறிய அவர், தாக்குதல் நடாத்தியவர்களுக்கும் தம்மை போன்ற பிள்ளைகள் இருக்கக்கூடும் என நினைவூட்டினார்.
எனினும், அதனை பொருட்படுத்தாது கடுமையான விதத்தில் எவ்வாறு தாக்குதல் நடாத்தினார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் முதற் தடவையாக ஆர்ப்பாட்டமொன்றில் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடாத்தப்பட்டமையினால் தனது தலைப் பகுதியில் வலி காணப்படுவதாகவும், சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் தனக்கு கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தம்முடன் கல்வி பயிலும் சில மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவிக்கின்றது.
அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்வதற்காக சென்ற சில ஊடகவியலாளர்கள் மீதும் பொலிஸார் தாக்குதல் நடாத்தியுள்ளதாக பதிவாகின்றது.