பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2015

மகிந்தவை காட்டிக்கொடுத்த லலித் வீரதுங்க

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க தன் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுக்களை மகிந்த ராஜபக்ச மீது சுமத்தியுள்ளதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக இருந்த ரொஸ்மண்ட் சேனாரத்ன ஜனாதிபதித் தேர்தலின் இறுதி தருணத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைத்தொழில் அமைச்சின் செயலாளராக இருந்த அனுர சிறிவர்தன தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் லலித் வீரதுங்க தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக வீரதுங்க கூறியுள்ளார்.
ரொஸ்மண்ட் சேனாரத்ன தலைவராக இருந்த போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு அதிகமான சந்தர்ப்பத்தை வழங்காத காரணத்தினால், சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக அனுர சிறிவர்தனவை நியமிக்க நேர்ந்தாகவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
லலித் வீரதுங்க வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாரதூரமான ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றின் ஊடாகவே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதுடன் அதற்கும் வேட்பாளருக்கும் சம்பந்தமில்லை எனவும் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் நடந்த ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி பொறுப்பு என கூறப்பட்டமை இது முதல் முறையல்ல.
மகிந்த ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான சஜின்வாஸ் குணவர்தன, சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான ஷமல் ராஜபக்ச ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மீது பழியை சுமத்தியவர்களில் முதன்மையானவர்கள்.
இவர்களை தவிர பிரியத் பந்துவிக்ரம, வீலி கமகே ஆகியோரும் இதில் அடங்குகின்றனர். அரசாங்கத்தின் சாட்சியாளர்களாக மாறியுள்ள இவர்களுக்கு பாதுகாப்பு உட்பட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.