பக்கங்கள்

பக்கங்கள்

15 நவ., 2015

சிறையில் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு! 35 தமிழ் கைதிகள் மயக்கம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8வது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் கைதிகள் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 35 கைதிகள் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட வாக்குறுதி கடந்த 7 ஆம் திகதி வரை நிறைவேற்றப்படாததையடுத்து மறுநாள் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம்
இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் ஆரம்பித்தனர்.
ஜனாதிபதி தம்மை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் கைதிகள்
இருக்கின்றனர்.
நல்லாட்சியில் எமது உறவுகளுடன் வாழத்தான் நாம் ஆசைப்படுகின்றோம். ஆனால், சாவுதான் எமக்குத் தீர்வு என்றால் நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம். எம்மை
ஜனாதிபதி விடுவிக்காவிடின் சாகும்வரை எமது போராட்டம் தொடரும்'' என்று தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவுகள் ஊடாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் உயிரைக் காப்பாற்றி அவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கைதிகளின் உறவுகள் அழுதவாறு கூறுகின்றனர்.