பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2015

திருச்சி முகாமைச்சேர்ந்த 4 ஈழத் தமிழர்களை விடுதலை செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி! எஞ்சிய ஈழத் தமிழர் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடவும் கோரிக்கை!!-தமிழக வாழ்வுரிமைக் கட்சி

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சந்திரகுமார் என்ற சஞ்சீவ் மாஸ்டர், சுரேஷ்குமார், மகேஸ்வரன், தங்கவேலு மகேஸ்வரன் ஆகிய 4 ஈழத் தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்துள்ளதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் எந்த ஒரு விசாரணையுமின்றி ஈழத் தமிழர் என்ற காரணத்துக்காக மட்டுமே பல ஆண்டுகாலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டங்களையும் நடத்தி உள்ளது; ஊடகங்கள் மூலமாகவும் இவர்களது விடுதலைக்காக தமிழக அரசை வலியுறுத்தியும் வந்தது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தேன். இந்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 4 ஈழத் தமிழர்களை விடுதலை செய்துள்ளதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்றும் இந்த போர்க்குற்றங்களுக்காக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; தனித் தமிழீழம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் ஆகிய சட்டமன்றத் தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றி உலகத் தமிழருக்கு பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.
தற்போது திருச்சி முகாமில் இருந்து 4 தமிழரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது உலகத் தமிழர்களுக்கு ஆறுதலைத் தருகிறது. அதே நேரத்தில் திருச்சி, செய்யாறு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எஞ்சிய ஈழத் தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்கள் பொதுமுகாம்களில் உள்ள தங்களது உறவினர்களுடன் இணைந்து வாழ்வதற்கோ அல்லது அவர்கள் விரும்பும் வெளிநாட்டுக்குச் செல்லவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.