பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2015

நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம்! உங்களுக்காகப் போராடுவோம்! மகஸின் சிறையில் வடக்கு முதல்வர் உணர்வுபூர்வ உரை...


“நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம். உங்களுக்காகப் போராடுவோம்” என கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த
ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உணர்வுபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்துவருவதையறிந்து அவர்களை நேரில் பார்வையிடுவதற்காக இன்று காலை அவசரமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து நண்பகலளவில் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற முதலமைச்சர் உண்ணாவிரதிகளைச் சந்தித்து உரையாடினார்.
“உங்களுடைய விடுதலைக்காக வடக்கு கிழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை முழு அளவிலான ஹர்த்தால் போராட்டம் ஒன்றை நாம் நடத்தினோம். உங்களுடைய விடுதலைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என்பதை இதன் மூலமாக வெளிப்படுத்தியிருக்கின்றோம். இது ஆரம்பம். எமது இந்தப் போராட்டம் தொடரும்.
உங்களுடைய போராட்டம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் நான் கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கின்றேன். தொடர்ந்தும் அதனைத் தெரியப்படுத்துவேன். இதன் மூலமாக உங்களுடைய பிரச்சினை தொடர்பில் அவர்களும் அக்கறை கொண்டுள்ளார்கள்.
உங்களுடைய நிலை மிகவும் மோசமடைந்துவருவதை அறிந்துதான் நான் இன்று இங்கு வந்தேன். உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று நான் உங்களைக் கோரவில்லை. ஆனால், உங்களுடைய உடல்நிலை மோசமடைந்துவருவதால், உங்களுக்காக நாம் சிறைக்கு வெளியே போராடுவோம் என்ற உறுதியை நான் வழங்குகின்றேன். அதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்றுதான் நான் கேட்கின்றேன்.
ஜனாதிபதியுடன் உங்களுடைய பிரச்சினை குறித்து நான் பேசியுள்ளேன். இன்று அவர் பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளார். இன்று மாலை அது குறித்து தெரியவரும். எப்படியிருந்தாலும், உங்களுடைய விடுதலைக்காக உங்களுக்காக சிறைக்கு வெளியே நாம் போராடுவோம்” என முதலமைச்சர் உணர்வுபூர்வமாக இங்கு உரையாற்றினார்.
முதலமைச்சருடன் சட்டத்தரணி இரத்தினவேல் உட்பட மற்றும் சிலரும் சென்றிருந்தார்கள். உண்ணாவிரதக் கைதிகளின் நிலையையும் பார்வையிட்ட முதலமைச்சர், கைதிகளின் விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் உரையாடினார்.