பக்கங்கள்

பக்கங்கள்

3 நவ., 2015

முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் கையளிக்கவுள்ளார்.. சுமந்திரன்

முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வைத்து எம்மிடம் கையளிக்கவுள்ளார். இந்தப் பெயர்ப்பட்டியல் கிடைக்கப்பெற்ற பின்னரே, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமது விடுதலையை வலியுறுத்தி நாட்டிலுள்ள 14 சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைதிகள் தற்காலிகமாக இடைநிறுத்தினர்.
இந்நிலையில், இது தொடர்பில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றுக் காலையில் தொலைபேசியில் உரையாடினேன். தமிழ் அரசியல் கைதிகள் முதற்கட்டமாக பிணையிலேயே விடுவிக்கப்படவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையே அரசு மேற்கொள்கின்றது.
அவ்வாறாயின் பிணையில் விடுவிக்கப்படப் போகின்றவர்கள் தொடர்பிலான விவரத்தை வழங்குமாறு பிரதமரிடம் கோரினேன்.
அதற்கமைய பெயர்ப்பட்டியலை நாடாளுமன்றத்தில் வைத்து எம்மிடம் கையளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்தப் பெயர்ப்பட்டியல் கிடைக்கப்பெற்ற பின்னரே, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தப்படும்''  என்றார்.