பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2015

இலங்கைப் பெண்ணின் மரணதண்டனையைக் குறைக்க தூதரகம் மேன்முறையீடு


சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ள கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனையை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தளர்த்துமாறு ரியாத் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் சவூதி அரேபியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மேன்முறையீட்டுக்கான செலவை இலங்கை வெளிநாட்டு விவகார அமைச்சு ஏற்றுக்கொள்ளுமென அந்த அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இலங்கைப் பெண் கல்லெறிந்து கொல்லப்படவுள்ளமை இலங்கை மக்களின் மத்தியில் பெரும் துயரத்தையும், பரிதாபத்தையும் உருவாக்கியுள்ளதால் மனிதாபிமான அடிப்படையில் அத்தண்டனை தளர்த்தப்படவேண்டும் என்று மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ரியாத் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை கூட்டாக நடவடிக்கை எடுத்துள்ளன.
கொழும்பு மருதானைப் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண் இளைஞர் ஒருவருடன் தகாத தொடர்பு வைத்திருந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்தே அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு நூறு கசையடிகள் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இந்தப் பணிப்பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.