பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2015

வட மாகாண மலர்க் கண்காட்சி; கார்த்திகைப்பூ சூடி ஆரம்பிப்பு

வட மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க் கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி நேற்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இதனைத் தொடக்கி வைத்துள்ளார்.

வடமாகாண சபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடித்து வருகிறது.

இதன் நடவடிக்கைகளில் ஒன்றாக நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர்க்க ண்காட்சியில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னணியில் உள்ள தாவர உற்பத்தியாளர்கள் 16 காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனர்.

மாகாண விவசாயத் திணைக்களமும் தனியான காட்சிக்கூடமொன்றை அமைத்துள்ளது.

இக்காட்சிக் கூடங்களில் எல்லாவிதமான பயன்தரு மரக்கன்றுகளும், வண்ண மலர்ச்செடிகளும், பல்நிற இலைச்செடிகளும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பார்வையிடவும், வாங்கிச் செல்லவும் எனத் தொடக்க நாளிலேயே ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். 

தொடக்க நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், சு.பசுபதிப்பிள்ளை, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன்,

மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாதசுந்தரம், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

கார்த்திகைப்பூ பூக்கத் தொடங்கும் இம்மாதத்தில் விருந்தினர்கள் அனைவரும் கார்த்திகைப் பூ சூட்டப்பட்டு வரவேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்காட்சி எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை வரை தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணிவரை இடம்பெற உள்ளது.