பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2015

பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார் இங்கிலாந்து ராணி எலிசபெத்

இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு ராணி எலிசபெத் மதிய விருந்து அளித்தார்.


பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு பயணமாக நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்று மதியம் லண்டன் சென்றடைந்த அவருக்கு, விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, லண்டன் டவுனிங் தெருவில் உள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு பிரதமர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இருதரப்பு ஒத்துழைப்புகள், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், அணுசக்தி உள்பட பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடப்பட்டது.

இதன் பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதன் பின்னர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதன் மூலம், இங்கிலாந்து நாடாமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றார்.

இந்நிலையில், இன்று மதியம் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். பின்னர், ராணி எலிசபெத், பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிய விருந்து அளித்தார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு முக்கிய தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து வாழ் இந்தியர்கள், லண்டனில் உள்ள வெம்ப்லே ஸ்டேடியத்தில் வரவேற்பு அளிக்கின்றனர். பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும் இந்த நிகழ்ச்சியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.