பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2015

இத்தாலி அருகே நடுக்கடலில் தவித்த 782 அகதிகள் மீட்பு



வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில் செல்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக அவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சத்தை எட்டியுள்ளது. 

இதுதவிர, இந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் 3,692 பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டு மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தபடியாகவே உள்ளனர்.

இந்நிலையில், சிறிய ரக படகுகள் மற்றும் ரப்பர் மிதவைகளின் மூலம் லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வந்து நடுக்கடலில் சிக்கித்தவித்த 782 அகதிகளை இத்தாலிய கடற்படையினர் மீட்டுள்ளனர். இதுதவிர, ஒரு ஆணின் பிரேதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.