பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2015

கோத்தாவுக்காக பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவையின் பொது முகாமையாளரும்
, சிறிலங்கா இராணுவ முன்னாள் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக கடந்த செப்ரெம்பர் 3ஆம் நாள் அளித்த சாட்சியத்தில் மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர பொய்யான தகவல்களை வழங்கியிருந்தார்.
அவரது பொய்ச் சாட்சியம், கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீதிருந்த அளவுகடந்த மதிப்புக் காரணமாகவே அவரைக் காப்பாற்றும் நோக்கில் பொய்ச்சாட்சியம் அளித்ததாக ஒப்புக் கொண்டிருந்தார் மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர.
இந்த நிலையில், ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் காவல்துறையினர், கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் 190 ஆவது பிரிவின் கீழ் தண்டனை விதிக்கக் கூடிய குற்றத்தை மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர இழைத்துள்ளதாக, காவல்துறையினரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிவான், கிகன் பிலபிட்டிய, வரும் ஜனவரி 4ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என்று மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.