பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2015

விடுதலைப்புலிகளை போன்று இராணுவ புலனாய்வாளர்களையும் விடுவிக்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைக்கென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.
விடுதலைப்புலிகளின் சந்தேகநபர்கள் தற்போது விடுவிக்கப்படுகின்றமையை போன்று தமது உறவினர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று புலனாய்வு அதிகாரிகளின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பை, தாய்நாட்டுக்கான படைவீரர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
சம்மேளனத்தின் அமைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன, இதில் உரையாற்றும்போது விடுதலைப்புலிகளின் சந்தேகநபர்கள் வெறுமனே சட்டரீதியாக விடுவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைகளின்படியே விடுவிக்கப்படுகின்றனர்.  வெளிநாடுகளில் உள்ள டயஸ்போராக்களின் திருப்திக்காகவே அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகளும் இதற்கு சமனாக விடுதலைசெய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து இராணுவ புலனாய்வாளர்கள் கடந்த சில மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.