பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2015

அரசியல் தீர்வை மையப்படுத்தியே புதிய அரசமைப்பு

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாகவும், தேர்தல் சீர்த்திருத்தத்தின் அங்கமாகவும் புதிய அரசமைப்பு அமையவுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப் பரவலாக்கல் மற்றும் தமிழ் - சிங்கள - முஸ்லிம் இனங்களிடையே நிலவும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அரசமைப்பு அமையவேண்டும் என சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இது தொடர்பில் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன்  சுதந்திரக் கட்சிபேச்சு நடத்தவுள்ளது.

புதிய அரசமைப்பு தொடர்பில் ஆராய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியமித்துள்ள 12 பேர் கொண்ட குழு கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் கூடி இது தொடர்பில் ஆராய்ந்தது. இதன்போது நாங்கள் தீர்க்கமான முடிவுகளை எடுத்தோம். சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாகவே அதிகாரப் பரவலாக்கல், நாட்டில் நிலவும் தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளுக்கு அடுத்த வருடத்திலேயே தீர்வு என்பன உள்ளிட்ட நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கின்றது.

இதேவேளை,நாட்டில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்பிலும் இவை உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலேயே நாம் தற்போது ஆராய்ந்து வருகின்றோம்.

அந்தவகையில், எதிர்வரும் ஜனவரி மாதம் எமது குழு மீண்டும் கூடும். அங்கு எடுக்கப்படும் முடிவுகளை நாம் ஜனாதிபதியிடம் தெரிவிக்கவுள்ளோம்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவும், தேர்தல் சீர்த்திருத்தத்தின் அங்கமாகவும் அமையவுள்ள புதிய அரசமைப்பு தொடர்பில் ஜனவரி 9ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளார். இதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் விளக்கமளிப்பார் என்றார்.