பக்கங்கள்

பக்கங்கள்

9 டிச., 2015

விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை. இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமேயாகும்-திரு. சம்பந்தன்


மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு ஒன்றில்
கலந்துகொண்டு பேசிய அரசியல் ஆசானும் தமிழ்தேசிய கூட்டாமைப்பின் தலைவருமான டாக்டர் திரு. சம்பந்தன்
ஐயா வரலாற்று பெருமை மிக்க தகவல்களை வழங்கியுள்ளார்.
டாக்டர் திரு.சம்பந்தன் ஐயா பேசிய முழுவிபரமும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள எவரேனும் முயற்சிக்கலாம்.
இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள தமிழ் அரசுக் கட்சி பணியகத்தில் நேற்றுமுன்தினம் மாலை, கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட அவர்,
கட்சிக்குள் முரண்பாடு உள்ளதுதான். இல்லை என்பதற்கு இல்லை. ஆனால் முரண்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு வெளியில் செல்லக் கூடாது.
அனைத்து விடயங்களும் உள்ளுக்குள் பேசித்தீர்க்கப்பட வேண்டும்.
ஜனநாயக கட்சி என்ற ரீதியில் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அது ஒருபெரிய விடயமல்ல. ஆனால் அவை ஊடகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சுமந்திரனைப் பற்றியும் முதலமைச்சரைப் பற்றியும் இங்கு பேசப்பட்டது. அவர்களுக்குள் முரண்பாடுகள் உள்ளதுதான். இல்லை என்பதற்கில்லை.அது தற்போதும் இருக்கின்றது.
முரண்பாடு ஏற்பட்டமைக்கான காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரிக்கவில்லை என்பது தான்.
அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அந்த கட்சியை ஆதரிப்பதற்கு அவருக்கு ஒரு கடமை இருக்கிறது.
ஆனால் அவர் ஆதரிக்கவில்லை. ஆதரிக்காமல் விட்டது மாத்திரமல்ல, நான் மௌனியாகப் போகின்றேன், ஊமையாகப் போகின்றேன் என்றெல்லாம் சொல்லிவிட்டு அவர் விடுத்த அறிக்கைகள் வேறொரு கட்சிக்கு ஆதரவளிப்பதாக அமைந்ததாக ஒரு கருத்து இருக்கிறது.
இதனால் தான் இந்த முரண்பாடு ஏற்பட்டது. தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தினை கூட சுமந்திரன் முன்வைத்திருந்தார். இதனை நான் பேசித்தீர்த்துக் கொள்வோம் என கூறியிருந்தேன்.
இந்நிலையில் சுமந்திரன் அவுஸ்ரேலியாவுக்கு சென்றபோது இந்தவிடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவ்வாறு ஊடகத்தில் பதிலளித்திருக்கக் கூடாது.
கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய பிறகு அவர் அதனை ஊடகத்தில் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சில சமயம் ரணில் விக்கிரமசிங்கவோ,அல்லது ஆட்சியில் உள்ள வேறு நபர்களோ எங்கள் மத்தியில் சிறு சிறு விடயம் சம்பந்தமாக வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது. அவதானமாக இருக்க வேண்டும்.
விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை. இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமேயாகும். நாங்கள் ஆத்திரப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அவருக்கு ஆதரவாக குப்பைத் தொட்டியில் போடப்பட்ட ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருக்கின்றனர். இதனால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
அவரை முதலமைச்சராக்கியது நான், அவரை முதலில் போய் கேட்டது நான். எமது கட்சி கூடி முதன்முதலாக பேசியபோது அவருக்கு கட்சிக்குள் எவரும் ஆதரவாக இருக்கவில்லை.
மாவை சேனாதிராஜா மௌனம் சாதித்தார். இறுதி நேரத்தில் அண்ணனின் கருத்தோடு நீங்கள் அனைவரும் ஏற்று வந்தால் அவரைத்தான் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அது அவரின் பெரும் தன்மை.
இதன் பின்னர் அனைவரும் கூடி எடுத்த முடிவின் பிரகாரமே நாங்கள் நியமித்தோம். ஆனால் அவர் தற்போது தனி வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்.
நான் அவரை நிறுத்த மாட்டேன். இது மக்களின் முடிவு. நான் இந்த பதவியில் இருப்பது மக்களின் முடிவு. ஐயா நீங்கள் போக வேண்டும் விக்னேஸ்வரனை வைக்க போகின்றோம் என்றால் உடனடியாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்தியுள்ளது. இது தொடர்பில் பிரதமருடனும் பேச்சு நடத்தியுள்ளோம். எங்களது நிலைப்பாட்டுக்கு மாறான நிலைப்பாடுகளை அவர்கள் எடுக்கவில்லை.
அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதில் சிறிலங்கா அதிபரும் பிரதமரும் எந்த முரண்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை.
சாதகமான முடிவினை அவர்கள் எடுத்தபோதிலும் இன்னும் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவில்லை.தாமதம் ஏற்பட வேண்டிய அவசியமில்லை.
சம்பூரில் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட காணிகள் மீளப்பெறப்பட்டு அங்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளும் கையளிக்கப்பட்டுள்ளதுடன் இன்னுமொரு பகுதியையும் கையளிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுபோன்று வலிகாமத்திலும் ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் சிறிலங்கா அதிபருடன் பேசியுள்ளேன். எதிர்வரும் சில வாரங்களில் வலிகாமத்தில் சில காணிகள் விடுவிக்கப்படலாம்.
மகிந்த ராஜபக்சவின் காலத்தில் படையினரால் காணிகள் சுவீகரிக்கப்பட்டு பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.அவரின் தேவைக்காக பாரிய மாளிகை கூட கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அவர்கள் இராணுவ அதிகாரிகளாக இருக்கலாம் சிவில் அதிகாரிகளாக இருக்கலாம். எனினும் அந்த நிலையில் இருந்துவிடுபடுவது கடினமான விடயமாகும்.
அந்த நிலையில் இருந்து அவர்களை மீட்பதிலும் புதிய அரசாங்கத்திற்கு அசௌகரியமான நிலையே உள்ளது. அரசாங்கம் அதனை வேகமாக செய்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றி சிந்திக்க வேண்டிய தேவையும் உள்ளது.
இன்னுமொரு பக்கம் ரணில் விக்ரமசிங்க தனது செல்வாக்கினை வளர்த்துக் கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினை புறக்கணிக்கின்றாரா?
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கும் வாக்குறுதியை வழங்க முடியாத காரணத்தினால் அவரின் செல்வாக்கு சரியும் என்று அவர் நினைக்கின்றாரா? இவ்வாறான பல கேள்விகள் இன்று எழுந்துள்ளன.
எதுவும் நடைபெறவில்லையென கூறிவிடமுடியாது.பல விடயங்கள் நடைபெற்றுள்ளன. பல செயற்பாடுகள் நடைபெறவுள்ளது.
அரசியல் தீர்வு விடயத்தில் நாங்கள் மிகவும் உறுதியான நிலைப்பாட்டினையே கொண்டுள்ளோம். அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும்போது அதில் அரசியல் தீர்வு தொடர்பான பிரேரணைகளும் கொண்டு வரப்பட வேண்டும்.
முழு அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு அது மக்களிடம் பொதுவாக்கெடுப்புக்காக கொண்டு செல்லப்பட வேண்டும்.
அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் அரசியல் தீர்வும் இடம்பெறவேண்டும் என கோரியுள்ளோம். அவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமானால் எதிர்வரும் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
இது தொடர்பில் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம்.
அவர்கள் இது தொடர்பில் பல செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். அவற்றினை பகிரங்கப்படுத்த முடியாத நிலையே உள்ளது.
மகிந்த ராஜபக்ச காலத்தில் இருந்ததைப் போன்று ஒரு பாதகமான நிலை தற்போது தமிழர்களுக்கு இல்லை. அந்த நிலைமை மாறியுள்ளது. மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கள நிலைமையும் அரசியல் தீர்வு தொடர்பான நிலைமையும் மிக மோசமாக இருந்தன.
தமிழர்களுக்கு விமோசனம் இல்லாத நிலையே இருந்தது. ஆனால் இன்று கள நிலைமை ஓரளவு மாற்றம் பெற்று வருகினறது. ஆனால் நாங்கள் விரும்பும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்படவில்லை.
நாங்கள் பக்குவமாக, நிதானமாக செயற்பட வேண்டிய தேவை இன்று உள்ளது. இன்று அனைத்துலக சமூகத்தின் முழுமையான அனுதாபம் எங்கள் பக்கம் வந்துள்ளது. எமக்கு சாதகமான நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
எமது கஷ்டங்களையும் நிலைமைகளையும் அனைத்துலகம் நன்றாக புரிந்துள்ளது. நாங்கள் சமாதானமாகவும் பக்குவமாகவும் செயற்படுகிறோம் என்பதையும் அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் நியாயமான அதிகாரப்பகிர்வு மூலமாக ஒற்றுமையாக வாழக்கூடிய வகையில் தீர்வினை முன்வைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரையில் சரியானதை செய்ய விரும்புகிறார். சரியானதை செய்யும்போதே இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கம் ஏற்படும் சமாதானம் ஏற்படும், நாடு முன்னேறும் என அவர் நினைக்கின்றார்.
அவ்வாறான நிலைப்பாடுகள் காரணமாக அனைத்துலக மட்டத்தில் அவரின் செல்வாக்கு அதிகரிக்கிறது. அவரது செல்வாக்கு அதிகரிக்கும் அளவுக்கு எமக்கும் நன்மையளிக்கும். அப்போது அனைத்துலக சமூகத்தின் கருத்திற்கு அவர் இடமளிப்பார்.
ஆகையினால் நாங்கள் பொறுமைகாக்க வேண்டும். சில விடயங்களில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
நாங்கள் நிதானமாக,பக்குவமாக செயற்படுகின்றோம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. எமது பயணம் நீண்டது. நாங்கள் இன்னும் செல்ல வேண்டியுள்ளது. பல பாலங்களை தாண்ட வேண்டியுள்ளது.
அரசாங்கத்திற்கும் எமக்கும் உள்ள தொடர்புகளை தற்போதே துண்டித்துவிட முடியாது. அதனைப் பயன்படுத்தி நாங்கள் முன்னேறவேண்டும். அதன்காரணத்திற்காகவே வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்.
எதிர்வரும் வாரத்தில் நாங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளோம். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பின்னர் அரசியல் தீர்வு தொடர்பான பல விடயங்கள் வெளிவரும்.
சில தினங்களுக்கு முன்னர் , அரசியல் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றிற்கு கொண்டு செல்வதற்கு முன்னர் அது தொடர்பில் மக்களின் கருத்துகளை அறியவேண்டியுள்ளது. அது தொடர்பில் எங்கள் பங்களிப்பினையும் வழங்குமாறு பிரதமர் என்னிடம் கேட்டிருந்தார்.
நான் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன். அதற்காக நமது மக்களை அறிவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும்.

மிகமுக்கியமாக இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இணைந்த வடகிழக்கு கபடமான உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இணைப்பு முறையற்றது ,இணைக்கமுடியாது என தீர்ப்பளிக்கவில்லை.
ஜனாதிபதி இணைப்பினை நிறைவேற்றிய முறை தவறு என்றே கூறியுள்ளனர். அந்த நிலைப்பாட்டினை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இதுவரையில் நடைபெற்ற பேச்சுகளில் நாங்கள் இதனை கூறியுள்ளோம்.
இது மொழி ரீதியான விடயம். தமிழ் பேசும் மக்கள் தனித்துவமாக வடகிழக்கில் வாழ்ந்துவருகின்றனர். ஏனைய மாகாணங்களில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நாடு பிரிக்கப்படாமல் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வுகாணப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் மக்கள் பிரிக்கப்படக்கூடாது. தமிழ்ப்பேசும் பிரதேசங்கள் ஒன்றாக இருக்கவேண்டும். இது எங்கள் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை.
இதனை ஒருபோதும் தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியாது. இது சிக்கலான விடயம். ஆனால் அவற்றினை நாங்கள் கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.