பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2015

தமிழ் கைதிகளில் ஒருவர் இறந்தால்கூட இலங்கைக்கே பாரிய நெருக்கடி ; விக்கிரமபாகு எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் மூலம் அவர்களது போராட்டமே வலுவடையும் என்று தெரிவித்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, கைதிகளில் ஒருவர் உயிரிழந்தால்கூட அது இலங்கை அரசாங்கத்திற்குப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவிடும் என்றும் எச்சரித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான தலைவர்களை விடுவித்துவிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாதிருப்பது பௌத்த சமய கோட்பாடுகளுக்கே எதிராக செயலாகும்.

இவ்வாறு சிறைவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளில் ஒருவரேனும் உயிரிழந்தால் அது இலங்கைக்கே பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிடும். இவ்வளவு பெரிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழும்.

தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்படுவதோடு, பயங்கரவாதத் தடைச்சட்டமூம் நீக்கப்பட வேண்டியதே அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.

அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சிறையிலிட்டதால் இயக்கம் விருட்சம் போல போராட்டத்தை படரச்செய்தது. எனவே அந்த முறையின் ஊடாக பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதோடு, சுதந்திரம் வழங்குவதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும் என்றார்