பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2016

இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமை ப்புச் சீர்திருத்தம் என்ற விடயங்கள் இந்த ஆண்டின் பேசுபடு பொருளாகியுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக உலக நாடுகள் இலங்கை அரசுக்கு சில கட்டாய அறிவுரைகளை வழங்கியுள்ளன. இவற்றை நிறைவேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு. இதில் ஒன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற விடயமாகும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத்தவறி னால், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் உலக நாடுகளைச் சமாளிப்பது முடியாத காரியம் என்ற அடிப்படையில், எப்பாடுபட்டாகிலும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் ஏதோ ஒருவகையில் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாகுதல் என்ற விடயம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை தீர்மானிக்கின்ற தமிழ் சக்திகளை தம் வசப்படுத்துவதில் அரசின் இராஜதந்திரம் கடுமையாக வேலை செய்யத் தலைப்பட்டுள்ளது. அதாவது தமிழ் அரசியல் தலைமையை தம் வசப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்போடு இலங்கை அரசின் காய்நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இக் காய்நகர்த்தலில் எங்கள் அரசியல் தலைமையைச் சேர்ந்த சிலர் சிக்குண்டுவிட்டனர் என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும். தமிழ் அரசியல் தலைமையை தம்வசம் வளைத்துப்போட்டு, தருவதை வாங்குங்கள் என்று சொல்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் இந்த ஏற்பாட்டை உடைக்கின்ற ஒரு சக்தியாக தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு இப்படியாகத் தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்கு தமிழர் தரப்பில் எவரும் இல்லை என்ற கட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையின் உதயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளதென்பதை அண்மைக் கால நிகழ்வுகள் உறுதிசெய்துள்ளன. யுத்தத்தால் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் என்ற மிகப் பெரியதொரு துன்பப்பட்டியல் எங்கள் கண்முன் இருக்கின்றபோது, எந்தத் தமிழ் அரசியல் தலைமையும் தன்னிச்சையாகச் செயற்பட முடியாது. எனவே அனைத்துத் தமிழ்த் தரப்பும் ஒன்று பட் டுச் செயற்பட வேண்டும் என்பது இங்கு முக்கியமானது. இவ்விடத்தில்தான் எங்கள் புலம்பெயர் உறவுகளின் ஒன்றுபட்ட குரல் தேவைப்படுகிறது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்த பேரழிவுகளை வெளிப்படுத்தி சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது திசை திருப்பியவர்கள் எங்கள் புலம்பெயர் உறவுகள். எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கான ஆயத்தங்கள் நடக்கின்ற இவ்வேளையில், எங்கள் புலம்பெயர் உறவுகள் உலக நாடுகள் மூலமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்ப தையும் தமிழினம் ஒன்றுபட்டு தமது உரிமையைக் கேட்பதற்கு வலியுறுத்தவும் முன்வர வேண்டும். இது காலத்தின் கட்டாய தேவை.

சர்வதேசப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு நீதியினைப் பெறமுடியும் !!
சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இப்போது உயிருடன் இல்லை என்ற சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்றினைத் தெளிவுபடுத்தும்படி கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஒரு சர்வதேசப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்கள் நீதியைப் பெறமுடியும் எனத் மீள வலியுறுத்தியுள்ளது.
கடந்த தைப் பொங்கலன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்த பொங்கல் நிகழ்வொன்றின் போது சிறீலங்காப் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தற்போது எவரும் உயிருடன் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
2009 மே மாதம் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளிடம் அமைதியான முறையில் சரணடைந்த தங்களுடைய உறவுகளின் கதி என்ன ஆயிற்று என்பது பற்றி இன்னும் ஏதுமறியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் பிரதமரின் இக்கருத்துக்கள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. தாங்கள் பாதுகாக்கப்பட்டு, இறுதியாக விடுதலை செய்யப்படுவோம் என்ற வாக்குறுதிகளை நம்பி, போரின் இறுதியில் பாதுகாப்புப் படைகளின் கரங்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பெருந்தொகையான குடிமக்கள் தங்களை ஒப்படைத்தனர். அப்போதிருந்து இன்னும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதோடு தடயம் எதுவுமில்லாத அளவு காணாமலும் போயுள்ளனர்.
காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு, தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு நடந்தவற்றின் முடிவு தெரியாதவிடத்து  ‘உண்மையை அறிவதற்கான உரிமை’ இருக்கிறது என்பதைச் சர்வதேசச் சட்டம் அங்கீகரிக்கிறது. மேலும் கட்டாயமாகக் காணாமற்போகச் செய்யப்படும் குற்றத்திலிருந்து அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் 2015 டிசம்பர் 15 அன்று சிறீலங்கா கையொப்பமிட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் 21 வது பிரிவின்படி, காணாமற்போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதோடு அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு  ‘காணாமற்போனவர்களுக்கு நடந்ததென்னவென்ற என்ற உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமையையும்’ அளிக்கிறது.
பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்த ஆயிரக் கணக்கானோர் இப்போது உயிருடன் இல்லை என்பதை எந்த அடிப்படையில் அவர் வெளியிட்டார் என்ற உண்மையைப் பகிரங்கமாக வெளியிடுமாறும், அவர்களுடைய உடல்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய திட்டவட்டமான தகவலை குடும்பங்களுக்குக் கொடுத்துதவுமாறும்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதமர் விக்கிரமசிங்கவிடம் கடுமையாக வலியுறுத்துகிறது. அத்தகைய திட்டவட்டமான தகவலை அளிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்து தவறுமானால், அது காணாமற்போனவர்களின் குடும்பங்களின் துன்பத்தை நீடிக்கச் செய்வதோடு, அவர்களது மனித உரிமைகள் மீறப்படும் குற்றத்தையும், சர்வதேச சட்டத்தின்கீழ் பல்வேறு கடப்பாடுகளிலிருந்தும், மனித உரிமைகள் பேராயத் தீர்மானம்A/HRC/RES/31/1 (15 அக்டோபர் 2015) முன்வைத்த கடப்பாடுகளிலிருந்தும் தவறிவருவதை உள்ளடக்கியதாக இருக்கும்.
புதிதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இவ்வுண்மையின் மூலம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஒரு சர்வதேசப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்கள் நீதியைப் பெறமுடியும் என்றும் சிறீலங்காவைச் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேராயத்திடமும்  ஐ.நா. பாதுகாப்புப் பேரவையிடமும்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தி வருவதையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பெருந்திரள் வன்கொடுமைகளை நிகழ்த்திய அதே பாதுகாப்புப் படைகள் தாம் தமிழர் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் இன்னும் நிறுத்தப்பட்டுள்ளன என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.