பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜன., 2016

’இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிப்பு’ துப்பாக்கி சண்டை தொடர்கிறது

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது. 

நேற்று தூதரகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற தீவிரவாதிகள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். தூதரகம் மீது நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தூதரக அதிகாரிகள் உறுதிபடுத்தினர். தீவிரவாதிகள் இந்திய தூதரகத்திற்குள் நுழைய முற்பட்டபோது, அதனை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை முறியடித்தது, பின்னர் அங்கு ஆப்கானிஸ்தான் படை விரைந்தது. தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளில் 2 தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது. 

இதில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 
தாக்குதலுக்கு எந்தஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்திய விமானப்படை தளம் மீது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காலையும் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்திய தூதரக அலுவலகம் அமைந்து உள்ள பகுதியின் அருகே தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையிலான சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையானது இந்திய தூதரகத்தை சுற்றிலும் அரண்போல் நிறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியானது பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது என்றும் பொதுமக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது, 
தீவிரவாதிகள் கொல்லப்படுவார்கள் என்று மாகாண கவர்னர் முகமது நூர் பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார். 

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் தாக்கப்படுவதும், தீவிரவாதிகளின் இலக்காவதும் தொடர் கதையாகவே உள்ளது.

2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் காபூல் நகரில்உள்ள இந்திய தூதரகம் இரண்டு முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 

ஹீராட் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் இந்திய தூதரக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 

கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் ஜலாலாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகியது. இதில் 9 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.