பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2016

சென்னை வெள்ளம்: நிதி திரட்ட ஃபெடரர், வாவ்ரிங்கா ஷரபோவா கையெழுத்திட்ட பொருள்கள் ஏலம்

சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக டென்னிஸ் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர், வீராங்கனை மரிய
ஷரபோவா ஆகியோர் கையெழுத்திட்ட விளையாட்டுப் பொருள்கள் ஏலம் விடப்படுகின்றன.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் நடைபெற்று வரும், நுங்கம்பாக்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் இப்பொருள்கள் ஏலம் விடப்படும்.
மூன்று தொகுப்புகளாக உள்ள இப்பொருள்களை ஏலம் கேட்பவர்கள், தாங்கள் அளிக்க விரும்பும் தொகையை குறிப்பிட்டு, மைதானத்தில் உள்ள பெட்டிகளில் அளிக்க வேண்டும்.
அதிக ஏலம் கேட்பவர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பொருள்கள் வழங்கப்படும்.
ஏலம் விடப்படும் பொருள்கள் விவரம்
தொகுப்பு 1: ரோஜர் ஃபெடரர் கையெழுத்திட்ட 'ஹெட் பேண்ட்', விம்பிள்டன் குறிப்பேடு, படங்கள், வாவ்ரிங்கா கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை, சென்னையின் எஃப்சி அணியினர் கையெழுத்திட்ட பனியன் மற்றும் ஹையத் ஹோட்டல் வழங்கும் மதிய உணவு கூப்பன்.
தொகுப்பு 2: மரிய ஷரபோவா கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை உள்ளிட்ட பொருள்கள், மேலாடை, ஷரபோவா மற்றும் ஃபெடரர் கையெழுத்திட்ட படங்கள், ஜேம்ஸ் பிளேக் கையெழுத்திட்ட சுயசரிதை, சென்னையின் எஃப்சி அணியினர் கையெழுத்திட்ட பனியன் மற்றும் ஹையத் ஹோட்டல் வழங்கும் மதிய உணவு கூப்பன்.
தொகுப்பு 3: மரிய ஷரபோவா கையெழுத்திட்ட மேலாடை, வாவ்ரிங்கா கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை, டென்னிஸ் பந்து, ஹையத் ஹோட்டலில் இரு  நாள்கள் தங்குவதற்கான கூப்பன், சென்னையின் எஃப்சி அணியினர் கையெழுத்திட்ட பனியன் மற்றும் 2016 ஆம் ஆண்டுக்குரிய சென்னை ஓபன் குறிப்பேடு.