பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2016

பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலின் போது இலங்கை விமானப்படை விமானிகளும் இருந்தனர்


பதான்கோட் விமானப்படைத் தளம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, இலங்கை விமானப்படை விமானிகளும் அங்கு தங்கியிருந்ததாக, இந்திய இராணுவத்தின் மேற்குப் பிராந்திய கட்டளை பணியக தளபதி லெப்.ஜெனரல் கே.ஜே.சிங் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பதான்கோட் விமானப்படைத் தளத்தினுள், கடந்த 2ம் நாள் அதிகாலையில் தீவிரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகளும், 7 இந்தியப் படையினரும் கொல்லப்பட்டனர்.
இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானங்கள் மற்றும் எம்.ஐ.-25, எம்,ஐ-35 தாக்குதல் உலங்குவானூர்திகளின் தளமான பதான்கொட் விமானப்படைத் தளம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவுடையதாகும்.
இங்கு ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு எதிராக “டங்கு சுரக்சா” என்ற பெயரில், இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், லெப்.ஜெனரல் கே.ஜே.சிங் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட போது, தளத்தினுள், விமானப்படையினரின் 3000 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரம் பேரும், நட்பு நாடுகளின் பயிற்சி விமானிகள் 23 பேரும் அங்கு தங்கியிருந்தனர்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, மியான்மார் ஆகிய நாடுகளின் பயிற்சி விமானிகளே பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தங்கியிருந்தனர் என்றும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் லெப்.ஜெனரல் கே.ஜே.சிங் மேலும் தெரிவித்தார்.