பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2016

துணை முதல்வர் பதவி வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டாரா? : மு.க.ஸ்டாலின் பேட்டி


தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்தை கடந்த செப்டம்பர் 20–ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்ட அவர் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து உரையாடினார். அவர்களிடம் கோரிக்கை அடங்கிய மனுவை பெற்றுக் கொண்டார். 3 கட்டமாக பயணத்தை முடித்த அவர் சென்னையில் கடந்த மாதம் 6–ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 233 தொகுதியையும் முடித்து இன்று நிறைவாக 234–வது தொகுதியாக தியாகராயர் நகர் சென்றார். அங்கு வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் :

 234 தொகுதிகளிலும் நமக்கு நாமே பயணம் மூலம் மக்களை சந்தித்து வந்துள்ளீர்கள்! மக்கள் மனதில் காணப்படும் பிரதான எண்ணம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதா ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் மக்கள் மனதில் காணமுடிகிறது.

பல்வேறு தொகுதிகளில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராகவே மக்கள் நினைக்கிறார்களே?

 நீங்கள் நினைப்பது நிறைவேறட்டும்.

நமக்கு நாமே பயணத்தை பலர் கேலியும், கிண்டலும் செய்தார்களே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த பயணத்தை பல தலைவர்கள் விமர்சித்தார்கள். அதை நான் ஊக்கமாகவே பார்க்கிறேன்.

நமக்கு நாமே பயணத்தின் வெற்றி தேர்தலில் பிரதிபலிக்குமா?

கண்டிப்பாக தேர்தல் சமயத்தில் பிரதிபலிக்கும்.

தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் பதவி வேண்டும் என்று விஜயகாந்த் கேட்பதாக சொல்லப்படுகிறதே?

அப்படி யார் சொன்னது? விஜயகாந்த் சொன்னாரா? நீங்களாகவே யூகித்துக் கொண்டு கேள்வி கேட்டால் எப்படி?