பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2016

சென்னை ஐ.ஐ.டி.மாணவி டேராடூன் சாமியார் ஆசிரமத்தில் மீட்பு

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பரோடி பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் புருஷோத்தமன். இவரது மகள் பிரதியுஷா (வயது 26). சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி பிரதியுஷா மாயமானார். அவர் தங்கி இருந்த அறை நீண்டநேரம் மூடியே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து அறை மாணவிகள் இதுபற்றி விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். வார்டன் சாந்தி பட்டாச்சார்யா வந்து அறைக்கதவை திறந்து பார்த்த போது 2 கடிதம் சிக்கியது. அதில் ஆங்கிலம், தெலுங்கில் எழுதப்பட்டு இருந்தது.

ஆன்மீக தேடலுக்காக இமயமலை செல்வதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இது பற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பிரதியுஷா கடந்த 23–ந் தேதி கோவையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் ரெயிலில் மும்பை சென்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.

பிரதியுஷா செல்போனை ஆய்வு செய்த போது அன்றைய தினம் 5 முறை அவர் டேராடூனில் உள்ள சிவா குப்தா என்பவருடன் 5 முறை பேசியதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது பற்றி உத்தரகாண்ட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் போலீசார் டேராடூன் நகரம் முழுவதும் வீடு வீடாக சோதனை போட்டனர். கடைசியில் சிவ குப்தா என்பவரது ஆசிரமத்தில் பிரதியுஷா தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் பிரதியுஷாவை மீட்டனர். இந்த ஆசிரமத்தை சிவ குப்தா என்பவர் நடத்தி வந்தார். அவர் தன்னைத்தானே சாமியார் என்று அறிவித்துக் கொண்டு ஆன்மீக சேவையில் ஈடுபட்டார். இவரைப் பற்றி கேள்விப்பட்ட பிரதியுஷா சாமியாருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தனது ஆன்மீக தேடல் ஆர்வம் பற்றி மாணவி பிரதியுஷா செல்லவே அவரை கோவையைச் சேர்ந்த தனது சீடர் பாஸ்கர் மூலம் டேராடூன் வரவழைத்தது தெரிய வந்தது. மகள் மீட்கப்பட்ட தகவல் அறிந்து தந்தை புருஷோத்தமன் டேராடூன் விரைந்து மகளை அழைத்து வந்தார். மகள் கிடைத்து விட்டதால் புகாரை வாபஸ் பெறுவதாக கோட்டூர்புரம் போலீசுக்கு புருஷோத்தமன் தெரிவித்தார்.

இதற்கிடையே அந்த ஆசிரமத்தில் மேலும் இளம் பெண்கள் இருப்பதாக புருஷோத்தமன் கூறினார். எனவே சாமியார் நல்லவரா? போலி சாமியாரா? என உத்தரகாண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.