பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2016

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது

காங்கிரஸ் ஆட்சி செய்துவந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 9 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். 

இதனால் முதல்–மந்திரி ஹரிஷ் ராவத் நாளை (திங்கட்கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் கே.கே.பால் உத்தரவிட்டார். இதனிடையே ஆட்சியை தக்கவைக்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஹரிஷ் ராவத் ஈடுபடுவதாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தை காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ., ஒருவர் நேற்று வெளியிட்டார். இதையறிந்த பா.ஜ.க.வினர், முதல்–மந்திரி குதிரை பேரத்தில் ஈடுபடுவதால் அவர் அந்த பதவியில் இருக்கும் தகுதியை இழந்து விட்டார் என குற்றம்சாட்டினர். 

மேலும் மாநில அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர். நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உடனடியாக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் உத்தரகாண்ட் கவர்னர் மாநில அரசின் தற்போதைய நிலை குறித்து அனுப்பிய அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் இன்று முடிவு எடுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் அரசு சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரஇருந்த நிலையில் புதிய திருப்பமாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கவர்னர் அறிக்கையை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.