பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2016

தனக்கான வீழ்ச்சியை வைகோ தானாகவே உருவாக்கிக் கொண்டார்: தமிழருவி மணியன்

விஜயகாந்தின் முதுகுக்குப் பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைபாட்டில் நின்று விட்ட வைகோ, தனக்கான வீழ்ச்சியைத் தானாகவே
உருவாக்கிக் கொண்டார் என்பதுதான் உண்மை என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்து மக்களுக்கு நல்வழி காட்டிட வானத்துத் தேவன் மண்ணில் வந்து இறங்கியது போல் விஜயகாந்தின் வருகையை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்கள். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதன் மூலம் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மாற்று அரசியல் குறித்து நாக்கு யாகம் நடத்துவதற்கான தார்மிகத் தகுதியை முற்றாக இழந்து விட்டார்கள். மாற்று அரசியல் என்பது ஆட்சி நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவரை அகற்றிவிட்டு இன்னொருவரைக் கொண்டு வந்து அமர்த்துவது அன்று.  அழுக்கடைந்து கிடக்கும் ஆட்சி பீடத்தின் சகல நுனிகளிலும் படிந்திருக்கும் கறைகள் அனைத்தையும் அழித்தொழித்து, நேர்மையும் தூய்மையும் தன்னலம் துறந்த வாழ்வையும்  மேற்கொண்ட ஒரு லட்சிய மனிதரிடம் அதிகாரத்தை ஒப்படைத்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைத் தொடர்ந்து செயற்படுத்தும் வழிமுறைக்குப் பெயர் தான் மாற்று அரசியல்.

அதிமுக-வில் அரங்கேற்றப்படும்  வரம்பற்ற தனிநபர் துதி, ஒற்றை நபரை மையமாகக் கொண்ட அதிகார அரசியல்,  ஆடம்பர ஆரவாரக் கட்-அவுட் கலாச்சாரம் அனைத்தும் அப்படியே பின்பற்றப்படும் அமைப்புதான் தேமுதிக என்பதில்  இருகருத்துக்கு   இடமில்லை.      கலைஞரின்  குடும்ப  அரசியல்,  வாரிசு அரசியல் குறித்து மேடைதோறும் மூச்சுவிடாமல்  முழங்குபவர்கள்,  அவரைவிட மோசமான குடும்ப அரசியலையும், வாரிசு அரசியலையும் வளர்த்தெடுத்தபடி வலம் வரும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதன் மூலம், இந்த மண்ணில் எந்த வகையான மாற்று அரசியலுக்கு இவர்கள் வியூகம் அமைக்கப் போகிறார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் விளக்கியாக வேண்டும்.
விஜயகாந்தின் முதுகுக்குப் பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைபாட்டில் நின்று விட்ட வைகோ, தனக்கான வீழ்ச்சியைத் தானாகவே உருவாக்கிக் கொண்டார் என்பதுதான் உண்மை.  பௌர்ணமி நாளில் மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்தும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். பௌர்ணமிக்கு அடுத்த நாளில் தேய்பிறை தொடங்கி அமாவாசை இருட்டில் முடியும்.  தமிழக அரசியலில் புதிய வெளிச்சத்தை கொண்டுவந்து சேர்ப்பதற்காகப் புறப்பட்டவர்கள் அமாவாசை இருட்டில் மக்களை ஆழ்த்தும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே இந்த அணி விஜயகாந்த் மூலம் பல பிரச்னைகளைச் சந்திக்கும்.

ஒட்டு மொத்தமாகக் கூட்டிப் பார்த்தாலும் 12 விழுக்காடுக்கு மேல் எட்ட முடியாத இக்கூட்டணி தேர்தலில் தோல்வியுற்ற நிலையில்,  தேர்தலுக்குப் பின்பு திசைக்கொன்றாய் பிரிந்து போகும். இந்தக் கூட்டணி ஜெயலலிதாவையும் கலைஞரையும் வீழ்த்துவதற்கு எந்த மேலான லட்சியத்தையும் பலியிடுவதற்குத் தயாராகிவிட்டது என்பதுதான் பொய்யின் நிழல் படாத நிஜம்" எனக் கூறியுள்ளார்.