பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2016

கூகுளின் Street View…! புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்?


பள்ளிக் காலத்தில் இலங்கை வரை படமும், உலக வரைபடமும் வாங்கிக் கொண்டு போய் வரைந்து, அதில் எங்கள் மாவட்டம், எங்களுக்கு தெரிந்த இடங்கள் என்று பார்த்த காலம் போய், எங்கள் இடத்தையே தெளிவாக பார்க்கும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது கூகுள்.
மேற்குலகில் சில வருடங்களுக்கு முதல் அறிமுகத்திற்கு வந்த Google street view என்னும் வசதி இப்பொழுது இலங்கைக்கும் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் பெரும்பாலான பகுதிகளை இந்த வசதியினூடாக பார்வையிடக் கூடியதாகவுள்ளது.
மிகத் தெளிவான வசதியினைக் கொண்டிருக்கும் இந்த கூகுள் Street View ஏனைய நாட்டவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதோ இல்லையோ நிச்சயமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் தமது தாய்த் தேசத்தை விட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சொந்த பந்தங்களை விட்டு, பிறந்து வளர்ந்த சொந்த தாய் நாட்டை விட்டுப் பிரிந்து அந்நிய தேசத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது முக்கியமான நிகழ்வுதான். கிடைத்தற்கரிய பேறு தான்.
ஏனெனில் 1990ம் ஆண்டு இலங்கையை விட்டு பிரிந்த ஒருவருக்கு அவர் பிறந்த ஊர் இப்பொழுது எப்படியிருக்கும் என்று அறவே தெரியாது உருக்குலைந்து போயிருக்கும். நீண்ட காலமாக இடைவிடாமல் பொழியப்பட்ட குண்டு மழைக்குள் அந்த நிலம் வடித்த செந்நீரால் காய்ந்த பிரதேசங்களாக விளங்குகின்றன.
இன்னும் சிலரின் நிலப்பகுதிகள் இன்னமும் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளிலேயே சிக்கிக்கிடக்கின்றன. இந்நிலையில் இப்பொழுது கிடைத்திருக்கும் வசதியானது பல்வேறுபட்ட நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கான மிகப்பெரிய வரன் தான்.
இதேவேளை, இலங்கையின் முக்கிய நகரங்கள் மாத்திரமல்லாது, கிராமப்புறங்களையும் சரியான விலாசத்தினைக் கொண்டு பார்க்க கூடியதாக இருந்தாலும், தற்போது குடியேற்றப்பட்ட இடமான வலிகாமம், மற்றும் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த நாகர்கோவில் உட்பட இன்னும் பல இடங்கள் கூகிளில் பார்க்கமுடியாதவாறு இருக்கின்றது.
பெரு வீதிகள், கடைகள், கோவில்கள், பாடசாலைகள் என எங்களுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத அத்தனை இடங்களையும் கைத் தொலை பேசியிலும், கணனியிலும் தெளிவாக பார்க்கின்ற அளவிற்கு கூகுள் இப்படியொரு அதிரடியை மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விடயம் தான்.
இதே தொழில் நுட்பம் கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை நமக்கு கிடைத்திருக்குமாயின் இன்று குற்றவாளிகள் யார் யார் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டிருக்க முடியும் என்பதோடு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் எமக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுந்திருப்பார்கள்.
என்ன செய்ய. காலம் தாழ்த்தியே எமக்கு எல்லாமே கிடைக்கின்றது.