பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2016

திக்கம் இளைஞரின் தொடரில் யங்ஹென்றிஸ், சென்.அன்ரனிஸ் அணிகள் முன்னேறின

திக்கம் இளைஞர் வி.கழகம் நடத்திவரும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டங்களில் இளவாலை
யங்ஹென்றிஸ் விளையாட்டுக்கழகம் மணற்காடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் என்பன வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்களுக்கு முன்னேறின.
சென்.அன்ரனிஸ்- சிறி அம்பாள்
திக்கம் இளைஞர் கழக மைதானத்தில் முதலாவதாக இடம் பெற்ற ஆட்டத்தில் மணற் காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகமும் நாச்சிமார் கோயிலடி சிறி அம்பாள் விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் அன்ரனிஸ் சார்பாக சுஜீபன் முதல் கோலைப் பதிவு செய்தார். 11 ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை சிறி அம்பாள் அணி கச்சிதமாகப் பயன்படுத்த ஆட்டம் சமநிலையானது. வேறெந்த கோல்களும் பதியப்படாத நிலையில் முடிவடைந்தது முதல் பாதி. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கிடைத்த சில வாய்ப்புக்களையும் வீணாக்க கோல் கணக்கில் மாற்றம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது ஆட்டம். இறுதி 2 நிமிடங்கள் இருக்கும் போது அலெக்ஸ் அடுத்தடுத்து 2 கோல்களைப் பதிவுசெய்ய 3:1 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மணற் காடு சென். அன்ரனிஸ்.
இமையாணன் மத்தி – யங்ஹென்றிஸ்
தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இமையாணன் மத்திய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. ஆட்டத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம் 6:0 என்ற கோல் கணக்கில் பெரு வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.