பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2016

கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் 2ஆவது இடத்தில் பெங்களூர்

பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீ
ழ்த்தி 2ஆவது இடத்துக்கு முன்னேறியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 14 ஓவர்களில் 203 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களையே எடுத்து படுதோல்வி கண்டது.
பெங்களூர் அணியின் கிறிஸ் கெயில் விராட் கோஹ்லி இணைந்து 11 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்காக 147 ஓட்டங்கள் விளாசித்தள்ளினர். கிறிஸ் கெய்ல் 4 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 32 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்தார். விராட் கோஹ்லி 28 பந்துகளில் 50 ஓட்டங்கள் என்று வந்து, பிறகு 47 பந்துகளில் சதம் கண்டு 50 பந்துகளில் 113 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி தனது 4ஆவது ஐ.பி.எல். சதத்தின் மூலம் 4,002 ஓட்டங்களுடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். சுரேஷ் ரெய்னாவின் 3,985 ஓட்டங்கள் சாதனையை முறியடித்தார் விராட் கோஹ்லி.
மைதானம் நெடுக கோஹ்லியும், கெய்லும் பந்தை சிதறடிக்க எதிரணித் தலைவர் முரளி விஜய்யால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பின்னர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் எஸ்.அரவிந்த், முரளி விஜய், ஹஷிம் ஆம்லா ஆகியோரை வெளியேற்றினார். பிறகு நடுக்கள வீரர்களை யஜுவேந்திர சாஹல் வீழ்த்தி, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 12ஆவது ஓவரில்தான் கிங்ஸ் லெவன் தட்டுத்தடுமாறி 100 ஓட்டங்களை எடுத்தார். 14ஆவது ஓவருக்குப் பிறகு மழை வந்தது. ஒருதலைப்பட்சமான ஆட்டத்தில் விராட் கோஹ்லி மீண்டும் ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
15 ஓவர்கள் ஆட்டத்தில் சதம் எடுத்தது பெரிய விஷயம். இதனை நான் எதிர்பார்க்கவில்லை என்று கோஹ்லி கூறினார்.