பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2016

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட அரசு அதிகாரி எரித்து கொலை


ஓசூர் நகராட்சியில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணிபுரிந்து வந்தவர் கோலைசெழியன். நேற்று காலை 11 மணியளவில் வழக்கம் போல் அலுவலகத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

மாலை 4 மணிக்கு அவரது மனைவி ரேவதிக்கு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய கோலைசெழியன், “ரூ. 50 லட்சம் தயார் செய்து வை” என்று கூறி விட்டு டெலிபோன் இணைப்பை துண்டித்தார். தொடர்ந்து கணவருடன் பேச முடியாததால் ரேவதி அதிர்ச்சி அடைந்தார். கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.

இதனால் பதட்டம் அடைந்த ரேவதி ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோகிணி பிரியாவிடம் புகார் செய்தார். உடனே அவர் போலீசாருடன் சேர்ந்து கோலை செழியனை தேடும் பணியில் ஈடுபட்டார். அவரது செல்போன் எண்ணை வைத்து எங்கு இருக்கிறார் என்று விசாரித்தனர். இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி கே.என்.புதூர் அருகே சாலையோரத்தில் ஒரு கார் எரிந்து கொண்டு இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது காரில் இருந்த ஒருவர் தீக்காயங்களுடன் தப்பி ஓடி அருகில் இருந்த பூந்தோட்டத்தில் பதுங்கி இருந்தார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் ஓசூர் நகராட்சி நில அளவையாளர் கோலைசெழியனை ரூ. 50 லட்சம் கேட்டு கடத்தி வந்து காருடன் எரித்துக் கொன்றது தெரிய வந்தது.

கணவர் கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.