பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2016

தனபாலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? -கார்டனை கரைய வைத்த நெகிழ்ச்சிக் கதை

தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார் பி.தனபால். தமிழக சட்டமன்றமும்
தன்னுடைய இருபதாவது சபாநாயகரை சந்திக்க இருக்கிறது. ' தனபால் மீது முதல்வர் ஜெயலலிதா கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பின்னால், நெஞ்சை நெகிழ வைக்கும் 15 ஆண்டு வரலாறு உள்ளது' என்கின்றனர் அ.தி.மு.கவினர். 

சட்டப் பேரவை தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கும் வருகிற 3-ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்தமுறையும் தனபாலும், பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியிட இருக்கின்றனர். சட்டசபை வரலாற்றிலேயே 98 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட எதிர்க்கட்சி இதுவரையில் அமைந்ததில்லை. அதற்கேற்ப இவர்களைச் சமாளிக்க, 'பொள்ளாச்சி ஜெயராமனோ, செங்கோட்டையனோ வரலாம்' என அ.தி.மு.கவினர் பேசி வந்தனர். ' மீண்டும் தனபால் வருவார்' என அ.தி.மு.க சீனியர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதைப் பற்றி நம்மிடம் விவரித்தார் அ.தி.மு.க.வின் சீனியர் ஒருவர். 

"கார்டன் குட்-புக்கில் இடம் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒருமுறை நம்பிவிட்டால் கடைசி வரையில் தனது கருத்தில் இருந்து முதல்வர் மாற மாட்டார். ஒருகட்டத்தில் துரோகம் செய்கிறார்கள் என தீர்க்கமாக அவர் முடிவெடுத்துவிட்டால், அந்த நபரின் எதிர்காலம் அதல பாதாளத்திற்குப் போய்விடும். ஆனால், தனபால் மீது முதல்வர் கொண்டுள்ள பாசம் அளவிட முடியாதது. அதற்குப் பிரதானமாக சில விஷயங்கள் இருக்கின்றன" என்றவர்,
" 2001-ம் ஆண்டு சங்ககிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் தனபால். தேர்தல் நடப்பதற்கு சில நாட்கள் இருந்த சூழலில், திடீரென கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் மிகுந்த கோபத்தோடு அம்மா சில கேள்விகளைக் கேட்டார். 'என்ன மிஸ்டர்.தனபால் தேர்தல் வேலை பார்க்கற கட்சிக்காரங்களுக்கு நீங்க சோறுகூட வாங்கித் தர்றதில்லை. கட்சிக்காரங்ககிட்ட இருந்து விலகியே இருக்கீங்கன்னு புகார் வந்திருக்கு. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?' எனக் கடுமையைக் காட்ட,  

அதிர்ந்து போன தனபால், 'அம்மா என்னை மன்னிச்சிருங்க. நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். நம்ம கட்சிக்காரங்களுக்கு நான் சோறு செஞ்சு போட்டாலும் யாரும் சாப்பிட மாட்டாங்க. இதுவரைக்கும் இரண்டு தடவை என் சாப்பாடை அவங்க புறக்கணிச்சுட்டாங்க. அத்தனை சோறும் வீணாப் போச்சு. எங்கள மாதிரி அருந்ததியர் சமூகத்து வீட்ல எல்லாம் அவங்க சாப்பிட மாட்டாங்கம்மா' எனக் கண்ணீர் வடிக்க, மிகுந்த அதிர்ச்சியோடு தனபாலைப் பார்த்தார். சில நிமிடத்திற்குப் பிறகு, 'இப்படியெல்லாம் நடக்குமா? பார்த்துக்கலாம். நீங்க போய் தேர்தல் வேலையைப் பாருங்க' என அனுப்பி வைத்தார்.

அந்தத் தேர்தலில் வென்ற கையோடு வந்த தனபாலுக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். அதற்கு என்ன காரணம் தெரியுமா? 'உங்க வீட்டுல சோறு சாப்பிடாம புறக்கணிச்சவங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே நீங்கதான் சோறு போடப் போறீங்க' என்பதுதான் அது. அதன்பிறகு தொடர்ந்து அம்மாவின் குட்-புக் லிஸ்ட்டில் இடம் பிடித்துவந்தார். எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், கோஷ்டியை வளர்க்காமல் கட்சி, விசுவாசம், மென்மையான அணுகுமுறை என கார்டன் வட்டாரத்தில் அணுக்கமாக இருந்தார். 

கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, முதலில் துணை சபாநாயகர் பதவியையும், பிறகு யாரும் எதிர்பாராமல் சபாநாயகர் பதவியையும் கொடுத்தார். 'உங்களை வணங்கும் இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சபாநாயகர் பதவி'  எனக் குறிப்பால் உணர்த்தினார் அம்மா" என்றார் நெகிழ்ச்சியோடு. 

முதல்வரின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், தனபால் செய்த ஒரு காரியத்தை அதிர்ச்சியோடு விவரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். "அம்மா இவ்வளவு பாசம் காட்டினாலும், சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுவார். கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை எங்களால் மறக்க முடியாது. ஒருநாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணிக்குப் போன் போட்டார் தனபால். 'என் வீட்ல வேலை பார்த்த சமையல்காரன், இப்ப உங்க வீட்டுக்கு வேலைக்கு வந்துட்டான். அவன் சரியில்லை. ஒரு நிமிஷம்கூட உங்க வீட்ல அவன் இருக்கக் கூடாது' எனக் கோபத்தோடு சொல்ல, அந்த சமையல்காரரை வேலையை விட்டு அனுப்பினார் வீரமணி. இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர், ஒரு சமையல்காரனின் வாழ்க்கையைக் கெடுக்கலாமா? என நொந்து கொண்டோம்" என்கின்றனர். 

எது எப்படியிருந்தாலும், தமிழக சட்டசபையின் அடுத்த ஐந்தாண்டு கால வரலாற்றைத் தீர்மானிப்பவராக மாறியிருக்கிறார் தனபால். எதிர்க்கட்சிகளின் விவாதம், முதல்வரின் விளக்கம் என மொத்த சபையும் தனபாலைச் சுற்றியே சுழலப் போகிறது.