பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2016

சிறிதரனை ஒதுக்க செல்வத்துடன் கைகோர்த்த சுமந்திரன்

தமிழரசுக் கட்சிப் பாசத்தால் இனவிரோதி சுமந்திரனுடன் கடந்த தேர்தல் மேடை உட்பட பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டவர் சிறிதரன். அத்துடன் சுமந்திரன் அவர்களின் இனவிரோதச் செயல்களைக் கண்டும் காணாததுபோல் நடந்துகொண்டார்.
சிறிதரனின் இந்தப் ‘பெருந்தன்மையை’ விளங்கிக்கொள்ளாத சுமந்திரன், கிளிநொச்சியில் சிறிதரன் அவர்களின் செல்வாக்கை சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
அதன் முதற்கட்டமாக சிறிதரனுடன் இருந்த செயலாளர் பொன்.காந்தனை சிறிதரனிடமிருந்து பிரித்தெடுத்து செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் ரெலோவில் இணையச் செய்தார் சுமந்திரன். இதுவரை காலமும் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு அலுவலகமே இருந்தது, அதாவது சிறிதரன் அவர்களின் அலுவலகம் மட்டுமே. ஆனால் இப்போது ரெலோ சார்பில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியில் இருந்து ஒருவரைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்தின் அனுமதியில்லாமல் கூட்டணிக் கட்சியில் இணைக்க முடியாது என்பது தமிழரசுக் கட்சியைத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆனால் சிறிதரன் விடயத்தில் தமிழரசுக் கட்சி மாற்றி யோசித்துள்ளது.
சிறிதரன் சுமந்திரனுடன் ‘இணக்க அரசியல்’ செய்யலாம் என்று யோசித்தாலும், சுமந்திரன் சிறிதரனை ஆபத்தானவராகவே பார்க்கிறார். அதாவது சுமந்திரனுக்கு ‘விடுதலைப் போராட்டம்’ ‘விடுதலைப் புலிகள்’ ‘இனப்படுகொலை’, ‘பிரபாகரன்’ ‘சுயநிர்ணய உரிமை’ ‘போரால் பாதிக்கப்பட்ட மக்கள்’ போன்றவைகள் ஒவ்வாதவை. ஆனால் சிறிதரன் இவைகளைப் பாவிக்காமல் எங்கும் பேசமாட்டார்.
சுமந்திரன் தமிழரசுக் கட்சியை விடுதலைப் போராட்டாங்களின் எச்சங்கள் இல்லாத, விடுதலைப் போராட்டத் தடயங்களை மழுங்கடிக்கக்கூடிய நபர்கள் மட்டும் உள்ள கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார் ஆனால் அதற்குப் பெருந் தடைக்கல்லாக சுமந்திரனுக்கு கண்முன் தெரிவது சிறிதரன்.
அந்தத் தடைக்கல்லை அகற்றுவதற்கு தன்னால் நேரடியாக இறங்க முடியாத காரணத்தால்தான் தனது விசுவாசி செல்வம் அடைக்கலநாதனை வைத்து சுமந்திரன் காய்களை நகர்த்துகிறார்.
பொன்.காந்தனுடன் ‘பேரம்பேசி’ ரெலோவில் இணைத்த சுமந்திரன் தற்போது ஈபிடிபியிலிருந்து விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரையும் ரெலோவுடன் இணையுமாறு பணித்துள்ளாராம்.
ஆழமாக நோக்கின் இது சிறிதரன் என்ற தனிமனிதனைப் பலவீனமாக்கும் திட்டம்மட்டுமல்ல மாறாக தமிழ்த் தேசியம் மற்றும் தமிழ்த் தேசிய அடையாளங்களை பேண முயல்கிற அல்லது அது தொடர்பாக கதைக்கும் நபர்களைப் பலவீனப்படுத்தி அப்புறப்படுத்தும் திட்டம். அனந்தி சசிதரனுக்கு நடந்ததை நாம் மறந்துவிட முடியாது.
இப்போது இருப்பது தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியல்ல. மாவை சேனாதிராஜாதான் தலைவராக உள்ளபோதும் கட்சி சுமந்திரனின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சுமந்திரன் அரசாங்கத்தை மனம் குளிர வைக்க எதையும் பலிகொடுக்கத் தயாராகத்தான் இருக்கிறார்.
தனிமனித வேற்றுமைகளை மறந்து தமிழ்த் தேசியத்திற்காக ஒன்றுபடும் நேரம் இது. குள்ளநரிகளின் பிரித்தாளும் தந்திரத்துக்குப் பலியாகி தனித் தனித் தீவாக இருக்கும் தமிழ்த் தேசியத்தில் அக்கறைகொண்ட அரசியல்வாதிகள் ஒன்றிணையவேண்டும்.