பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2016

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமா? ; ஐ.நா மீது தமிழ் ஊடகங்கள் நம்பிக்கையிழந்து ; சர்வதேச ஆய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களுக்கு நியாயத்தினை பெற்றுக்கொடுக்கும் என தமிழ் ஊடகங்கள்
நம்பியிருந்ததாகவும், ஆனால் தற்போது ஐ.நாவின் அர்ப்பணிப்பு குறித்து அந்த ஊடங்கள் நம்பிக்கையிழந்துள்ளதாகவும் சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச ஆய்வு நிறுவனமான ‘வெரிட்டே’ என்ற நிறுவனமே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் அந்த ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைத் தமிழரின் இலட்சியத்துக்கான சர்வதேச ஆதரவைப் பெறுவது குறித்து தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தும் ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றபோதிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அந்த ஊடகங்கள் இழந்துவிட்டன.
இலங்கை அரசு குறித்து குறைந்தளவு நம்பிக்கையே தமிழ் ஊடகங்கள் கொண்டிருப்பதும் புலனாகியுள்ளது. சில சாதகமான மாற்றங்களை சுட்டிக்காட்டும் அதேவேளை, ஒட்டுமொத்தத்தில் அரசு செயற்படும் வேகம் மற்றும் மேற்கொள்ளும் மாற்றங்கள் குறித்து அதிருப்தி காணப்படுகின்றது. சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான ஏமாற்று நாடகத்தை கொழும்பு ஆடுகின்றது என்று தமிழ் ஊடகங்கள் கருதுகின்றன.
அரசு தம்பட்டம் அடிக்கின்ற நல்லெண்ண முயற்சிகள் குறித்தும் தமிழ் ஊடகங்கள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளன. இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் நிலங்களை மீள வழங்காமை, அரசியல் கைதிகள் விவகாரத்துக்குத் தீர்வைக்காணத் தவறியுள்ளமை, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாமை போன்றவை குறித்து தமிழ் ஊடகங்கள் அரசைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றன.
மேலும், உண்மை, நியாயம், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கவேண்டும் எனத் தமிழ் ஊடகங்கள் கருதுகின்றன.
தமிழ் ஊடகங்களின் செய்திகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது சர்வதேச சமூகம் குறித்த நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனத் தென்படுகின்றது. சர்வதேச சமூகத்தின் கரிசனைகள் தத்தமது சொந்த நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் சர்வதே சமூகத்தை நம்புவது முட்டாள்தனம் எனத் தமிழ் ஊடகங்கள் கருதுகின்றன’ எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.