பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2016

விவேக் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா?' - குழம்பித் தவிக்கும் மன்னார்குடி வாரிசுகள்

போயஸ் கார்டனில் திருமண விழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. " விவேக் திருமணத்திற்கு
முதல்வர் வருவது உறுதி செய்யப்படவில்லை. இதனால் மன்னார்குடி உறவுகளிடையே குழப்பம் நீடித்து வருகிறது" என்கிறார் சசிகலாவின் உறவினர் ஒருவர். 

அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கு உடையவராக வலம் வருகிறார் விவேக். ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தைக் கட்டமைத்ததில் இவருக்குப் பெரிய பங்கு உண்டு. தியேட்டர் விவகாரத்தில், தி.மு.க தலைவர் கலைஞரால் நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டார். சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனான விவேக், முழுக்க முழுக்க கார்டன் அரவணைப்பிலேயே வளர்ந்தவர். ஐ.டி.சி, சாம்சங் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவருக்கு, கடந்த ஆட்சியின் இறுதியில் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பு வழங்கப்பட்டது. இருக்கும் இடம் தெரியாமல் வர்த்தகத்தை வளர்த்து வருகிறார் விவேக்.
இந்தநிலையில், ' வருகிற ஆகஸ்ட் இறுதிக்குள் விவேக் திருமணம் செய்தாக வேண்டும் என ஜாதகத்தில் இருக்கிறது. தள்ளிப் போடக்கூடாது’ என்று ஜோதிடர்கள் கணித்ததால், சசிகலாவின் தம்பி திவாகரன், திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வந்தார். குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்திப் போனதால், மகிழ்ந்து போனார் விவேக்கின் தாய் இளவரசி.

ஆனால், ' இந்தத் திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பது சந்தேகம்தான்' என்கின்றனர் கார்டன் ஊழியர்கள். அவர்கள் நம்மிடம், " ஆகஸ்ட் 29-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. வானகரத்தில் உள்ள எம்.எம்.திருமண மண்டபத்தில் கல்யாணம் நடக்க இருக்கிறது. திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என சசிகலாவின் உறவினர்கள் சீரியஸாக வேலை பார்த்து வருகின்றனர்.
முதல்வர் கலந்து கொண்டால், மீண்டும் கார்டனுக்குள் மன்னார்குடி சொந்தங்கள் வலம் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், திருமணத்தோடு தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவர் சில சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். அவருடைய  தொடர்புகள் பற்றி உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 'அந்த நபரோடு மேடையில் தோன்றினால், தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும்' என உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, விவேக் திருமணத்தில் முதல்வர் பங்கேற்கும் வாய்ப்பு மிகக் குறைவு. மற்றபடி, முதல்வரின் முழு ஆசிர்வாதமும் விவேக்கிற்கு உண்டு" என்கின்றனர். 

பொதுவாகவே, மன்னார்குடி வாரிசுகளின் திருமண விழாக்களில் முதல்வர் பங்கெடுப்பதில்லை. 'விவேக் திருமணத்திலும் சர்ச்சைகள் அணிவகுக்க வாய்ப்பு அளித்துவிடக் கூடாது' என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கிறது.