பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2016

முதுகு கட்டியால் அவதிப்படும் சிறுவனின் சிகிச்சைக்கு ஜெயலலிதா ஏற்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் முதுகு கட்டியால் அவதிப்படும் சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா
ஏற்பாடு செய்துள்ளார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், மத்திகிரி தரப்பு, குருபட்டி கிராமத்தைச் சேர்ந்த பவளக்கொடியின் மகன் சிறுவன் தனுஷ் முதுகுப் பகுதியில் பல ஆண்டுகளாக உள்ள கட்டியால் அவதிப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சிறுவன் தனுஷுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவுப்படி சிறுவன் தனுஷை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பிறவியில் ஏற்பட்டுள்ள “கான்ஜெடியல் மெலானோசைடிக் ஹெமன்ஜியோமா” நோய் என்றும், இதற்கு சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தான் சிறந்த சிகிச்சை அளிக்க இயலும் என்றும் தெரிவித்தனர்.
பவளக்கொடியின் ஏழ்மையான சூழ்நிலையை கருத்தில் கொண்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சிறுவன் தனுஷுக்கு ஏற்பட்டுள்ள நோயினை குணப்படுத்துவதற்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளார்.
சிறுவன் தனுஷ் மற்றும் அவரது தாயாரை சென்னைக்கு அழைத்து வந்து, சிறுவன் தனுஷுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைகள் அளித்திடவும், சிகிச்சை முடியும் வரை அரசு செலவில் சிறுவன் தனுஷும், தாயார் பவளக்கொடியும் சென்னையில் பாதுகாப்பாக தங்க ஏற்பாடுகள் செய்யும் படியும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.