பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூலை, 2016

சென்னை நகரில் கடற்கரை சாலை, ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை நள்ளிரவில் பைக் ரேஸ்

சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரை சாலை, ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் எக்ஸ்பிரஸ்
சாலை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் பைக் ரேஸ் நடக்கிறது.
இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பைக் ரேசில் பங்கேற்பவர்கள் மட்டுமல்லாமல் சாலையில் நடந்து செல்லும் அப்பாவிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக நல அமைப்புகளும் பொதுமக்களும் புகார் கொடுத்தாலும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் ‘விபத்தில்லா சென்னை’ என்ற பெயரில் சென்னை நகர் முழுவதும் போக்குவரத்து பொலிசார் ஆங்காங்கே கும்பல் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளை மடக்கி துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.
ஒரு சிலருக்கு மட்டும் இலவசமாக ஹெல்மெட் கொடுத்து அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவதாக உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
அதே நாளில் விபத்துகளுக்கு காரணமாக இருக்கும் பைக் ரேஸ் நடத்த வட சென்னை வாலிபர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். காலை முதல் மாலை வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்துவிட்டு போக்குவரத்து பொலிசார் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர்.
அதன்பிறகு இரவு ஏழு மணிக்கு ராயபுரம் மேம்பாலத்தில் இருந்து வாலிபர்கள் பைக் ரேசுக்கு புறப்பட்டனர். இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பங்கேற்றனர். இதனைக் கண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் சம்பவ இடத்திற்கு பொலிசார் செல்லவில்லை. இதையடுத்து பைக் ரேசும் களைகட்டியது. இந்த ரேசில் மட்டும் சில லட்சங்கள் கைமாறியது குறிப்பிடத்தக்கது.
இதனால் இரவு நேரங்களில் அவசரம் நிமித்தமாக பேருந்து நிலையம், மருத்துவமனைக்கு பொதுமக்கள் பைக்கிலோ அல்லது நடந்தோ அந்த சாலைகளில் செல்ல அச்சப்படுகின்றனர்.