பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2016

தமிழர்விளையாட்டு விழா-2016

தமிழர் விளையாட்டு விழா-2016 ஆரம்ப நிகழ்வாகிய, கொடியேற்றல், கொடிவணக்கம், அகவணக்கம் நிகழ்வுகளின் போது, மைதானத்திற்கு வருகை தந்திருக்கும், வீரர்கள், கழகங்கள் மற்றும் அனைவரும் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் இடத்தில் குறித்த நேரத்தில் ஒன்றுகூடுதல் அவசியம். வீரர்கள் தமது சீருடைகளுடனும், கழகங்கள் தமது இலச்சனைகள் மற்றும் கழக கொடிகளுடனும் ஒன்று கூடுதல் அவசியம். குறித்த விழாவின் முக்கியத்துவம் கருதி, அனைவரையும் இதனை இறுக்கமுடன் பின்பற்றுமாறு வேண்டுகின்றோம்.
இதுபோலவே பரிசளிப்பு நிகழ்வுகளின் போதும் குறித்த நடைமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகின்றோம். மேலதிக விபரங்ககளுக்கு, தங்கள் தங்கள் விளையாட்டுகளுக்கு பொறுப்பானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, முன்னரே விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும்.
ஏற்பாட்டுக்குழு
தமிழர் விளையாட்டு விழா-2016

 
சுவிஸ் தமிழர் இல்லம் 15 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 13ஆம் 14ஆம் திகதிகளில் ( சனி,ஞாயிறு) நடைபெறவிருக்கின்றது.
சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த விளையாட்டு விழாவில், வழமைபோல் இவ்வருடமும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான விளையாட்டு அணிகள் ஆர்வத்துடன் களமிறங்குகின்றன.
ஆண்கள், பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிளித்தட்டு முதலான குழு விளையாட்டுக்களும், இளையோருக்கான‌ தடகளப்போட்டிகளும் இடம்பெறவிருக்கின்றன. இவற்றுடன் கயிறு இழுத்தல், குறிபார்த்துச்சுடுதல், சங்கீதக்கதிரை என்பனவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கண் கட்டி அடித்தல், தலையணை அடிச்சமர் போன்றனவும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளன.
உதைபந்தாட்ட‌ இறுதிப்போட்டி சனியன்று இரவு பிரதான மைதானத்தில் மின்னொளியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெறும் அணிகளுக்கு பெறுமதி வாய்ந்த வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் என்பன வழங்கப்படவிருக்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளையோர்களை விளையாட்டுத்துறையில் மேம்பாடடையச் செய்வதோடு, அவர்கள் மத்தியில் தாயகம் குறித்த புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டே தமிழர் விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
வழமையை விட இவ்வருடம் மிக அதிக அணிகள் பங்கேற்க முன்வந்திருக்கின்றன. இது புலத்திலுள்ள தமிழ் இளையோர் மத்தியில் விளையாட்டுத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருப்பதையே வெளிப்படுத்துகிறது.

விழாக்குழு