பக்கங்கள்

பக்கங்கள்

28 ஆக., 2016

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து: பிரபல நடிகர் கைது





சென்னையில் நடிகர் அருண்விஜய் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபுள்யூ. கார், காவல்துறையினரின் வாகனத்தின் மீது மோதியதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மது விருந்தில் கலந்து கொண்ட அருண் விஜய், அதிகாலை 3 மணி அளவில் தனது மனைவியுடன் காரில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அருண் விஜய் ஓட்டி வந்த கார், தனது கட்டுப்பாட்டை இழந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேன் மீது மோதியது. இதில் போலீஸ் வேனின் பின்பக்கம் சேதமடைந்தது. 

சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், அருண் விஜய் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருண் விஜய் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியது தெரிய வந்தது. இதையடுத்து அருண்விஜய் ஓட்டி வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். 

அருண் விஜய் போலீசாரிடம் சிக்கியிருக்கும் தகவல் அறிந்து, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்நிலையத்திற்கு அவரது தந்தையும் நடிகருமான விஜயகுமார் இன்று காலை வந்தார். அருண் விஜய்யை, போலீசார் அவரது சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர். போலீஸ் வாகனத்தை அவர் சரி செய்து தருவதாக கூறப்படுகிறது. பின்னர் வெளியே செல்லும்போது விபத்து சம்பவம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் விஜயகுமார்.