பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2016

சர்வதேசத்துடன் மோதவேண்டாம் :அரசை எச்சரிக்கிறார் சம்பந்தன்

ஐ.நாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் மோதியதாலேயே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் மஹிந்த அரசு புறந்தள்ளப்பட்டதென குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அதனை நினைவில் இருத்தி தற்போதைய அரசாங்கம் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றும், ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து நாட்டை விடுவிப்போம் என்றும் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் தெரிவித்து வரும் நிலையில்,  மாத்தறையில் இடம்பெற்ற தேசிய அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்விலும் ஜனாதிபதி மைத்திரி இவ்வாறே குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடியாகவே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவி த்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் வாய்ப்பேச்சுக்களால் மோதுவதை விரும்பவில்லையென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், ஐ.நாவுடன் மோதாமல் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நாட்டின் நலன் தொடர்பிலானவை என்ற ரீதியில், அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயற்பட்டாலே அதற்கு ஆதரவளிப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த ஆட்சியை போலல்லாது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நியாயமான தீர்வுகள் எட்டப்பட வேண்டுமென்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.சர்வதேசத்துடன் மோதவேண்டாம் :அரசை எச்சரிக்கிறார் சம்பந்தன்