பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2016

கொட்டாஞ்சேனை மூவரின் உயிரிழப்பு ; தொடரும் மர்மங்கள்

கொட்டாஞ்சேனை, சென். பெனடிக் மாவத்தை – 70 ஆம் இலக்க தோட்டத்தில் வீடொன்றிலிருந்து  உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட
 தந்தை ,மகள் மற்றும் மகன் ஆகியோரின் மரணத்தின் மர்மம் தொடர்ந்து நீடிக்கின்றது.
இது தொடர்பில் பல்கோண விசாரணை கொட்டாஞ்சேனை பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த மூவரினதும் மர்ம மரணம் குறித்த தகவல்களை இரசாயன பகுப்பாய்வு அறிக்கையைத் தொடர்ந்து வெளிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
 சம்பவ இடத்திலிருந்து பொலிஸ் தடயவியல் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட மென் பான பக்கற்றின்  மாதிரிகள் மற்றும் உயிரிழந்த மூவரும் இறுதியாக உட்கொண்டதாக நம்பப்படும் காலை நேர உணவின் மாதிரிகள் ஆகியன அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும் என நம்புவதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இதனைவிட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற சட்ட வைத்திய பரிசோதனைகளின் போதும் மரணத்துக்கான காரணம் வெளிப்படுத்தப்படாத நிலையிலும் சடலங்களின் பாகங்கள் சில மேலதிக ஆய்வுக்காக எடுக்கப்பட்டு இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவற்றின் அறிக்கை கிடைக்கப் பெறும் வரையில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள மேலும் சில முக்கிய விடயங்களை மையப்படுத்தி தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, கொழும்பு வடக்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லயனல் குணதிலக ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்திரதிலகவின் ஆலோசனைக்கு அமைய கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி சில்வாவின் தலமையில் இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 கடந்த வெள்ளியன்று மதிய நேரம்  வாசுதேவன் சிவகுமார் (வயது 46),ததர்ஷினி (வயது 12), நவீன் அல்லது நவித்ரன் (வயது 9) ஆகியோர் தமது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த குடும்பத்தின் தலைவியான  ஜே. சுதா வெள்ளியன்று காலை  7.00 மணியளவில்  தனது மகன் இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் நிலையில் அது தொடர்பிலான ஆவணம் ஒன்றில் கையெழுத்திட மகன் கல்வி பயிலும் பம்பலபிட்டி பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றுக்கு சென்றுள்ளார்.  பாடசாலை விடுமுறை தினம் என்பதால் வீட்டில் மகன் மற்றும் மகள் ஆகியோரும் அவர்களின் தந்தையுமே இருந்துள்ளனர்.
 இந்நிலையில் முற்பகல் 10.30 மணியளவில் தாய் மீண்டும் வீட்டுக்கு வரவே வீட்டின் அறையொன்றின் கட்டிலில் மகனும், பிறிதொரு அறையில் தகப்பனும் வீட்டின் பிரதான அறையில் மகளும் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளனர். இதனைக் கண்ட தாய் உடனடியாக கூக்குரலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து குறித்த மூவரையும் வைத்தியசாலைக்கு உடன் கொண்டு சென்றுள்ளனர். எனினும் அதன்போதும் அவர்கள் மூவரும் உயிரிழந்தே இருந்துள்ளனர்.
 விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளின் படி, முதலில் குறித்த மூவரும் விஷம் அருந்து தற்கொலை செய்துள்ளதாகவே பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் விசாரணைகளின் சாட்சியங்களுக்கு அமைவாக அதனை உறுதிப்படுத்த சாட்சியங்கள் இல்லை எனவும் தெரிவித்தனர்.
  தாய் பாடசாலைக்கு சென்று மீளவும் வீடு திரும்பியுள்ள நேரத்துக்குள் மகன் தாய்க்கு தந்தையின் தொலைபேசியில் இருந்து தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்துள்ளதாகவும் இதன் போது மகன் பேசுவது தாய்க்கு சரியாக கேட்காமை காரணமாக அவ்வழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பிலும் தற்போதைய விசாரணையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.