பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2016

சம்மந்தன் உறுதிமொழி: பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் நிறுத்தம்!

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாகவும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் தமது காணிகளைத் தம்மிடமே வழங்குமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாகப் அவர்களது வாழ்விடங்களிலுள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னால் இரவு பகலாகத் தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
இதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சு.சுகிர்தன் ஆகியோருடன் பரவிப்பாஞ்சான் பகுதிக்கு இன்று மதியம் 1.00 மணிக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்து மக்களுடன் கலந்துரையாடி உள்ளனர்.
பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு எதிர்க்கட்சித்தலைவர் பரவிப்பாஞ்சான் மக்களது காணி விடுவிப்புக் குறித்துப் பேசியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் வாக்குறுதிக்கமைவாக இரண்டு வாராத்திற்குள் பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிமொழி வழங்கியதையடுத்து “தமது காணிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் போவோம்” என்ற மகிழ்ச்சியில் மக்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள்