பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2016

அவுஸ்திரேலியாவை பந்தாடிய இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 82 ஓட்டங்களில் அவுஸ்திரேலியாவை பந்தாடியுள்ளது இலங்கை அணி.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் கொழும்பில் இன்று நடந்து வரும் 2வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர்களான தில்ஷான் (10), குணத்திலக (2) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த சந்திமால் (48) சிறப்பாக ஆடி வந்த நிலையில், ஜம்பாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
அடுத்து வந்த அணித்தலைவர் மேத்யூஸ் (57), குஷால் மெண்டிஸ் (69), குஷால் பெரேரா (54) ஆகியோர் அரைசதம் அடிக்க அணியின் ஓட்டங்கள் சற்று உயர்ந்தது.
தனன்ஜெய டி சில்வா (7) நிலைக்கவில்லை. திசர பெரேரா (12), தில்ருவான் பெரேரா (5) என அனைவரும் ஆட்டமிழக்க இலங்கை 48.5 ஓவரில் 288 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில், மிட்செல் ஸ்டார்க், பால்க்னர், ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
இதனையடுத்து 289 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது அவுஸ்திரேலிய அணி. துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பின்ச் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஏமாற்றமளிக்க அணித்தலைவர் ஸ்மித் நிதானமாக நிலைத்து நின்று 30 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து பெய்லி 27 ஓட்டங்களில் வெளியேற வாட் 76 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து வந்த வீரர்கள் எவரும் நிலைத்து நின்று ஆடத்தவறியதால் அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 206 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இலங்கை அணி 82 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இலங்கை அணி.
இலங்கை அணி சார்பில் மாத்யூஸ்(2), பெரேரா(3), அபொன்சோ(4) விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
57 ஓட்டங்களுடன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய மாத்யூஸ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.