பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2016

ஐ.நா. செயலர் வருகைக்கு முன் வடக்கில் இடம்பெயர் முகாம்களை மூடத் திட்டம்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விஜயத்திற்கு முன்னரே வடமாகாணத்தில் உள்ள இடம்பெயர் முகாம்களை மூடுவதற்கான முயற்சிகளில்  அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

ஐ.நா செயலாளர் நாயகம் அடுத்தமாத முதல்வாரத்தில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்ப ட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள காணிகளில்லாதவர்களுக்கு உடனடியாக அரச காணி வழங்கு மாறும், விடுவிக்கப்படக்கூடிய இடங்களைச் சேர்ந்த மக்களுக்கு வீட்டுத் திட்டங்களை அவர்களது சொந்த இடங்களில் வழங்கி மீள்குடியேற்றுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், ஜனாதிபதியின் ஆலோசரும், கிழக்கு மாகாண ஆளுநருமான ஒஸ்ரின் பெர்ணான்டோ, யாழ் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தில் இந்த வாரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்கள் மற்றும் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையம் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதோடு வவுனியா மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் 97 குடும்பங்கள் உள்ளன.

இதேவேளை ஜனாதிபதி செயலகத்தினால் கடந்த மாதம் மாவட்டச் செயலகங்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக மீள்குடியேற்றங்களை முழுமைப்படுத்த வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.