பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2016

வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் படநிறுவனம் நடத்தி வந்த பிரபல சினிமா தயாரிப்பாளரான மதன்  தலைவா, அரவான், சகுனி,
எதிர்நீச்சல், உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீ ரென மாயமானார். 

பட அதிபர் மதன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் காணாமல் போனதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ஏராளமான மாணவ-மாணவிகளிடம் பணம் வசூலித்து ரூ.100 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக பட அதிபர் மதன் மீது புகார்கள் குவிந்தன. இந்த புகாரின் அடிப்படையில் பட அதிபர் மதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது. மேற்கண்ட 2 வழக்குகளையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தார்கள். ஏற்கனவே இந்த மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட அதிபர் மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பாரிவேந்தரை ஏன் விசாரிக்கவில்லை? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் ஆஜரான அரசு வக்கீல், இந்த வழக்கில் பாரிவேந்தரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் ஐகோர்ட்டின் கேள்விக்கு பதில் அளித்தார்.

இந்தநிலையில் பாரிவேந்தர் நேற்று மாலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பாரிவேந்தர் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் பாரிவேந்தரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

இரவிலும் அவரிடம் விசாரணை நீடித்தது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, பாரிவேந்தரிடம் விசாரணை நடக்கிறது என்றும், அவர் கைது செய்யப்படுவாரா? என்பது பற்றி விசாரணை முடிந்தபிறகுதான் சொல்லமுடியும் என்றும் தெரிவித்தனர்.

அவரிடம் 9 மணி வரையில் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விடிய விடிய இந்த விசாரணை நீடித்தது. 

இதனால் அங்கு பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி கேமராமேன்களும் தொடர்ந்து காத்திருக் கிறார்கள். இன்று காலை வரையிலும் பாரிவேந்தர் கைது செய்யப்படவில்லை என்றும் அவரிடம் விசாரணையே நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.