பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2016

தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இராணுவ உல்லாச விடுதிகள்

வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் படையினரின்
உல்லாச விடுதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை புள்ளி விபரங்களுடன் நேற்று வட மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வெளியிட்டுள்ளார்.
இதன்போது இரண்டு உல்லாச விடுதிகள், கேல்ப் விளையாட்டு மைதானம் ஆகியனவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாண சபையின் 61ஆவது அமர்வு நேற்று மாகாண சபை பேரவை செயலக சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த ஒரு தொகுதி மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் யாழ். அரசாங்க அதிபர் காணி உரிமையாளர்களுக்கு அனுப்பிய கடிதம் ஒன்று தொடர்பாக பேசப்படும் போதே எதிர்கட்சி தலைவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த ஆட்சிக் காலத்தில் வெளியான அளவீட்டு அறிக்கையின் படி வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் படைத்தரப்பின் ஆக்கிரமிப்பில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலம் இருந்தது.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 16 ஏக்கர் நிலத்தில் இராணுவத்தின் தல்செவன உல்லாச விடுதி அமைந்துள்ளது.
இதேபோல் 1 ஏக்கருக்கு அதிகமான நிலத்தில் இலங்கை விமானப்படையின் விடுமுறை ஓய்வு விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பொருளாதார நிலையம் ஒன்றுக்காக 52 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளி விபரங்கள் கடந்த ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டவை. ஆட்சிமாற்றத்தின் பின்னர் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தின் அளவு குறைந்திருக்கலாம்.
ஆனால் மக்களுடைய நிலத்தில் இராணுவ உல்லாச விடுதிகள், கோல்ப் விளையாட்டு மைதானங்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.