பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2016

தமிழ்க் கைதிகளில் சிலர் நவம்பர் 7க்கு முன் விடுதலை ; ஜனாதிபதி உறுதி

இலங்கையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்க் கைதிகளில் கணிசமானவர்களை அடுத்த மாதம் 7-ம்
திகதிக்குள் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சம்பந்தன்,
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுடன் நேற்று காலை நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நீதியமைச்சரும் நானும் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், வழக்கு விசாரணையின் கீழ் உள்ளவர்கள் மற்றும் வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் என்று மூன்று பிரிவினராக தமிழ்க் கைதிகள் சிறைகளில் உள்ளனர்.
வழக்கு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மன்னிப்பளித்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன்.
வழக்கு நடந்துகொண்டிருக்கும் கைதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினேன்.
தமிழ்க் கைதிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் கோரியிருந்த மூன்றுமாத அவகாசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டேன்.
பாரதூரமான குற்றங்களைச் செய்த கைதிகளைத் தவிர மற்றக் கைதிகளின் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்ற சமரசம் இருதரப்பிலும் ஏற்பட்டுள்ளது.
நீதியமைச்சருடனான பேச்சுவார்த்தையில் என்னுடன் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த முடிவு தொடர்பில் உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளுக்கு அறிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு ‘இனி அமுல்படுத்தப்படுவது கைதிகளின் முடிவில் தங்கியுள்ளது.
கைதிகள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தம் செய்யலாம் என்றும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
384 total views, 384 views today
ad