பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2016

கலைஞர் ஆணையிட்டதால் அப்பல்லோ வந்தேன்: ஸ்டாலின் பேட்டி

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் வந்தனர்.



முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’ஓரிரு நாட்களில் முதல்வர் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அறிக்கை வந்த நிலையில், மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று தற்போது அறிக்கை வந்துள்ள நிலையில், திமுக தலைவர் கலைஞரின் அறிவுறுத்தலின் படி மருத்துவமனைக்கு வந்தேன். அமைச்சர்கள், மருத்துவர்களை நேரில் சந்தித்து விசாரித்து வரவேண்டும் என்று கலைஞர் ஆணையிட்டதால்  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மருத்துவர்களிடமும் விசாரித்தேன்.  முதல்வர் நலம் பெற்று வருவதாக  அவர்கள் கூறினர்.  முதல்வர் நலம் பெற்று இல்லம் திரும்பி அவரது பணியை தொடரவேண்டும் என்று எனது சார்பாகவும், திமுக சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறினார்.