பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2016

யாழ். மாணவர்கள் கொலை வழக்கை அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றக் கோருகிறார் கம்மன்பில!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட பொலிஸாரை விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம்
அழைத்துச் செல்வது அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதால், குறித்த வழக்கு விசாரணைகளை அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.
தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கைதாகியுள்ள பொலிஸாருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பு பொலிஸ் மா அதிபரை சார்ந்துள்ளது. கைதாகியுள்ள பொலிஸார் ஐவரும் யாழ்ப்பாணத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காயிருந்தனர். அதனால் அவர்கள் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றிலேயே குறித்த வழக்கு விசாரணை இடம்பெறுகிறது.
இவர்கள் ஐவரையும் விசாரணைகளுக்காக யாழப்பாணம் அழைத்துச் செல்வது கைதான பொலிஸாருக்கு பாதுகாப்பாக அமையாது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமையினால் பொலிஸார் சார்ப்பில் தமிழ் மொழியில் சரளமாக பேசும் சட்டத்தரணிகளை தேடிக்கொள்வதும் கடினம். பொலிஸாருக்காக அவர்கள் ஆஜராவதும் கேள்விக்குரியாகவே உள்ளது.
தெற்கிலிருந்து சட்டத்தரணிகள் சென்றால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குரியாகி விடும். அதேபோல் வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது கைதானவர்களில் உறவினர்கள் யாழ்ப்பாணம் சென்றால் அங்கு அவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் இல்லை. இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு பொலிஸாரை சார்ந்துள்ளது. ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் பாதுகாப்பும் கேள்விக்குரியாகியுள்ள நிலையில் அவர்கள் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதனால் இந்த வழக்கை விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றுவதே சிறந்த வழியாகும் என்றார்.